நடராஜகுரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நடராஜகுரு (நடராஜன் பல்பு) கேரளவின் ஒரு முக்கிய தத்துவ அறிஞர். இவர் கேரள சமூகசீர்திருத்தவாதியும் ஆன்மீக ஞானியுமான நாராயண குருவின் மாணவர். உலகமெங்கும் நாராயணகுருவின் போதனைகளை கொண்டுசென்றவர்.
பொருளடக்கம் |
[தொகு] கல்வியும் ஆரம்ப வாழ்க்கையும்
எஸ் என் டி பி அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகன் டாக்டர் நடராஜன், பிற்காலத்தில் அவர் நடராஜ குரு எனஅறியப்படலானார். 1895ல் பிறந்தார். அவரை தன் பணிக்கு அளிக்கும்படி நாராயண குருவே கோரியதாக கூறப்படுகிறது. செல்வந்த குடும்பத்தில் பிறந்த நடராஜ குரு நிலவியலில் பட்டமேற்படிப்பினை முடித்தவர். மேற்கத்திய தத்துவம் கற்க பிரான்ஸ் போகும்படி அவரை நாராயணகுரு கேட்டுக் கொண்டார். சார்போன் பல்கலையில் உலகப்புகழ்பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார். கல்வியியல் குறித்த அவரது ஆய்வு யுனெஸ்கோ அமைப்பினால் உலக கல்வி முன்வரைவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1930 ல் ஜெனிவா தேசிய கல்லூரியில் (International Fellowship School in Geneva, Switzerland) உயர்பௌதிக ஆசிரியராக ஐந்து வருடம் பணியாற்றினார்.
ஊர் திரும்பிய குரு நாராயணகுருவின் சீடராக இருந்து கீழைத்தத்துவத்தை கற்றார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பலவும் நடராஜ குருவுக்கு கற்பிக்கும்பொருட்டு கூறப்பட்டு நடராஜ குருவால் எழுதியெடுக்கப்பட்டவை என்றுகூறப்படுகிறது. மூன்று வருடம் சென்னையில் அத்வைத அசிரமம் எனும் அமைப்பின் கீழ் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். பின்பு பிச்சையேற்கும் வாழ்க்கை மேற்கொண்டு பாரதம் முழுக்க ஆண்டியாக ஆறுவருடம் அலைந்து திரிந்தார். நாராயணகுரு ஸ்தாபித்த வற்கலை உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். எஸ் என் டி பி அமைப்பு ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்து அவ்வமைப்பை விட்டு முழுமையாக வெளியேறினார்.
[தொகு] தனி வாழ்க்கை
அதன் பிறகு பலவருடங்கள் பாரதம்முழுக்க அலைந்து திரிந்தார். அமைப்புகளில் நம்பிக்கை இருக்கவில்லை. தனியாக வாழ்வதற்காக 1023ல் ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் ஒரு தேயிலை தொழிற்சாலையிருந்த பகுதியை தானமாக பெற்று அதில் தன்கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தைத் துவங்கினார். நாராயணகுருவின் மரணம் வரை அங்கு தன்னந்தனிமையிலேயே படித்தும் தியானம் செய்தும் வாழ்ந்தார். அவர் வாழ்ந்தபகுதி பிறருக்கு தெரிந்திருக்கவில்லை.
[தொகு] எஸ் என் டி பி அமைப்பு வெளியேற்றமும் நாராயணகுருகுலம் அமைப்பும்
1928ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிராதனசீடர் குமாரனாசான் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார், சகோதரன் அய்யப்பன், டி கெ மாதவன் போன்ற பலர் எஸ் என் டி பி அமைப்பை விட்டு விலகிவிட்டிருந்தார்கள். அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில்முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாற்றப்பட்டது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது. ஆகவே நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய நாராயணகுருகுலம் எனும் அமைப்பை நிறுவினார். அதன் தலைமையகமும் வற்கலாவில்தான் அமைந்திருந்தது. சார்போனில் நடராஜ குருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரனதும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். நடராஜ குருவே நாராயணகுருவின் செய்தியை உலகம் முழுக்க கொண்டு சென்றவர்.
[தொகு] எழுத்துக்கள்
நடராஜ குரு ஆங்கிலத்திலும் குறைவாக பிரெஞ்சிலும் மட்டும்தான் எழுதினார். The world of Guru ,One Hundred Verses of the Self Instruction, Autobiography of an absolutist முதலிய இருபது நூல்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன. நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்தத்தை மேற்கத்திய தத்துவ மொழியில் விளக்கியவர் நடராஜகுரு. 1973 ல் மரணமடைந்தார். அவரது சமாதி வற்கலாவில் உள்ளது.
நடராஜகுருவின் மாணவர்களில் பிற்பாடு இந்திய சமூக ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்ட பலர் உள்ளனர். நாராயணகுருகுலத்தில் தலைமைப் பொறுப்புக்குவந்த நித்ய சைதன்ய யதி முக்கியமானவர். இப்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் முனி நாராயண பிரசாத், சுவாமி வினய சைதன்யா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.