பெட்ரோனாஸ் கோபுரங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள்
முக்கிய வாயிலுக்கருகிலுள்ள நடைபாதை மட்டத்திலிருந்து, கட்டிட உச்சிவரை அளக்கும்போது, மலேஷியா, கோலாலம்பூரிலுள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், உலகிலேயே இரண்டாவது {உலகின் உயரமான அமைப்புகள்|உயரமான கட்டிடங்களாகும்]]. இக் கட்டிடங்கள் கட்டிமுடிக்கப் பட்டதிலிருந்து, 2003 ஆம் ஆண்டு, அக்டோபர் 17ல் தாய்ப்பே 101 கட்டிமுடிக்கப்படும்வரை, உலகின் உயரமான கட்டிடமாக இதுவே இருந்துவந்தது. எனினும், உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்களாக இதுவே இன்னமும் இருந்து வருகிறது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டின் அதியுயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும்.
சீசர் பெல்லி என்னும் கட்டிடக்கலைஞரால் 1998ல் வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப்பிடியா உருக்கையும், கண்ணாடியையும் உபயோகித்துக் கட்டப்பட்ட 88 மாடிகளைக்கொண்ட இக்கட்டிடம், மலேசியாவின் பெரும்பான்மை முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடியதாக, இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவங்களுடன் ஒத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. மலேசியாவின் தேசிய எண்ணெய்க் கம்பனியான பெட்ரோனாஸ், உலகின் உயரமான கட்டிடத்தைக் கட்ட விரும்பியது. சியர்ஸ் கோபுரங்கள் போன்ற எனைய கட்டிடங்கள் சில அதிக உயரத்திலமைந்துள்ள பயன்பாட்டுக்குரிய தளங்களைக் கொண்டிருந்தாலும், பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடி உயரத்தில் அமைந்துள்ள அமைப்புரீதியான உச்சியைக் கொண்டிருப்பதுடன், உச்சியிலமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடியைத் தொடுகின்றன.
இரட்டைக் கோபுரங்களின் கீழ்த் தளத்தில், பிரபலமான, சூரியா கேஎல்சிசி என அழைக்கப்படும், அங்காடிப் பல்தொகுதி (shopping complex) ஒன்றுண்டு. இக் கட்டிடத்தில் பாரம்பரிய இசை நாடகங்களுக்கான மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.