அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic lateral sclerosis) அல்லது ஏ.எல்.எஸ் (ALS) என்பது ஒரு நரம்பு நோய். இந் நோய் லூ கெரிகு நோய் என்றும் கூறப்படுகின்றது. மால்டி டி சார்க்கோட், மோட்டர் நியூரான் நோய் என்றும் அழைக்கப்படுகின்றது.
தசையை இயக்கும் நரம்பணுக்கள் படிப்படியாய்க் கெட்டு சிதைவடைவதால் உடலில் உள்ள நம் விருப்பத்தால் இயக்க்கப்படும் தசைகள் எல்லாம் இயக்க இயலாமல் பழுதடைகின்றன. தசைகளை இயக்க நரம்புவழி வரும் உடலியக்கச் செய்திகள் மெள்ள மெள்ள அருகி, கடைசியில் மூளை செய்திகள் அனுப்பும் வல்லமையையே இழந்து விடுகின்றது. ஆனால் இந்நோயினால் நோயுற்றவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் முதலான மூளையின் பிற இயக்கங்களில் கெடுதி (பாதிப்பு) ஏதும் ஏற்படுவதில்லை. உடல் இயக்கம் மிகவும் கெட்டாலும் மூளையின் நினைவாற்றல், அறிவாற்றல், அவர்களின் ஆளுமை இயல்புகள் ஏதும் மாற்றம் அடைவதில்லை.
இந் நோயின் பெயரில் உள்ள அமையோட்ரோபிக் என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்து பெறுவதாகும். இது மூன்று சொற்களால் ஆனது : அ + மையோ + ட்ரோபிக் (அ = அல்ல, மையோ = தசை, ட்ரோபிக் = ஊட்டம்) அதாவது தசை ஊட்டம் பெறாமை என்பது அதன் பொருள். லேட்டரல் என்பது பக்கக் கிளை என்னும் பொருள் தரும். அதாவது தண்டுவடத்தின் பக்கங்களில் கிளக்கும் நரம்புகள் தசைகளைக் கட்டுப்படுத்தும் பகுதியைக் குறிக்கும். ஸ்க்லெரோசிஸ் என்பது இருகிக் கெடுவது என்னும் பொருள் தரும். எனவே இது நரம்பணுக்களின் குறைபாடால் தசைகள் ஊட்டம் பெறாமல் உடல் குறைவுறும் நோய் ஆகும்.