அருணாசலக் கவிராயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அருணாசலக் கவிராயர் (1712-1779) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகியோர்.
அருணாசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகக் கீர்த்தனைகள் என்னும் ஒப்பரிய இசைப்பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இசைநூல்கள் பல இயற்றிய இவர் இறையருளால் ஞான சித்தி பெற்றவர் என்று கூறப்படுகின்றார்.
இவர் இயற்றிய சில இசைப்பாடல்கள்:
- தில்லைத் தலம் போல சொல்லப் புவிமீதில், தெய்வத்த்ஸ்தலங்களுமுண்டோ நாளும் . - இராகம் - சௌராஷ்டிரம், தாளம் ஆதி தாளம்
- ஏன் பள்ளி கொண்டீர் அய்யா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் அய்யா. இராகம் - மோகனம், தாளம் - ஆதி தாளம்
- துணை வந்தருள் புரிகுவாய் - அனுமந்தா நீ, துணை வந்தருள் புரிகுவாய். இராகம் - கல்யாணி, தாளம் - மிஸ்ரசாப்பு தாளம்
- ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே. இராகம் - சாவேரி, தாளம் - ஆதி தாளம்
- வந்தனர் எங்கள் கலியாண- ராமச்சந்திரன் திருமுடிகாண. இராகம் - மத்தியமாவதி, தாளம் - அட தாள சப்பு
[தொகு] உசாத்துணை
- லேனா தமிழ்வானன் (பதிபாசிரியர்), தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
- மு.அருணாசலம், தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள் (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது). மு. அருணாசலம், சித்தாந்தம் என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.