இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1648 ஆம் ஆண்டில், பிரான்ஸிலுள்ள பாரிஸ் நகரில் சில இளம் கலைஞர்கள் ஒன்றுகூடி Academie Royale de peinture et de sculpture என்னும் பெயரில் ஒரு கவின்கலை நிறுவனமொன்றை உருவாக்கினர். இதுவே இக்கோல் நஷனல் சுப்பீரியர் டெஸ் பியூக்-ஆர்ட்ஸ் இன் முன்னோடி நிறுவனமாகும். இதில் முக்கிய பங்கு வகித்தவர் சார்ள்ஸ் லே புரூண் என்பவராவார். திறமையுள்ள மாணவர்களுக்கு, அவர்களுடைய பின்னணியைப் பாராது, இலவசமாகக் கலைத்துறைகளிற் பயிற்சியளிப்பது இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். பண்டைய கிரேக்க, ரோமானியக் கலைப் பாணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே, இந் நிறுவனத்தின் பயிற்சிகள் அமைந்திருந்தன. ஒவியம், சிற்பம் போன்ற துறைகளிற் பயிற்சி கொடுப்பதற்காக, 'சிற்ப, ஓவிய அக்கடமி' என்ற பிரிவும், கட்டிடக்கலைப் பயிற்சிக்காகக் 'கட்டிடக்கலை அக்கடமி' என்ற பிரிவுமாக இரண்டு பிரிவுகளாக இது இருந்தது.
அக்காலத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தினால் ரோம் நகரில் அமைக்கப்பட்டிருந்த Academie de France a Rome என்னும் புகழ்பெற்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் படிப்பதற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காகக் கடுமையான போட்டிகளை மாணவரிடையே, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனம் நடத்திவந்தது.
இந் நிறுவனம், 1816ல் பாரிஸிலுள்ள புதிய இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. இந்த இடத்திலேயே இது இன்றுவரை இருந்து வருகிறது. 1863ல் இது தற்போதிய பெயருக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பிரான்சின் கலை வரலாற்றில் இந் நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் நிறுவப்பட்டதன்பின், 19 ஆம் நூற்றாண்டுவரை, இருந்த பல புகழ் பெற்ற கலைஞர்கள் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.