எட்டிச்சாத்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எட்டிச்சாத்தன் கி.பி. 840 முதல் 855 வரை சீவல்லபனின் அரசியல் அதிகாரியாக பணியிலிருந்தவனாவான். சங்கப் புலவர் சாத்தனார் மரபில் வந்தவனாகக் கருதப்படும் இவனைப் பெரும்புகழ் படைத்தவன் என இவனால் கட்டப்பெற்ற பல குளங்களிலும், கால்வாய்களிலும் அமையப்பெற்றிருக்கும் கல்வெட்டுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. எட்டி என்ற சிறப்புப்பெயரைப்பெற்ற இவன் இருப்பைக் குடிக்கிழான் என்ற பட்டத்தினை பாண்டிய மன்னனால் பெற்றான். தென்பாண்டி நாட்டில் இவன் பல தொண்டுகள் செய்ததால் புகழ்பெற்றிருந்தான்.
முதலூர்,தென்வெளியங்குடி ஆகிய இரு ஊர்களிலும் உள்ள சிவன் கோயிலினைக் கட்டியவன் இவனே. இருப்பைக் குடியில் அமண் பள்ளி அமைத்தான். தென் வெளியங்குடி, கும்மமணமங்கலம் ஆகிய ஊர்களில் பெரிய ஏரிகளை அமைத்தான். இராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஏரி, குளம், கால்வாய்களை அமைத்தான் என எருக்கங்குடிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்வளம் பெருகிய அந்நாடு இருஞ்சோழநாடு என அழைக்கப்பெற்றது.