கல்லணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.