குறமகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குறமகள் ஈழத்து எழுத்தின் மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றிருப்பவர்.
தற்போது கனடாவில் வசிக்கும் இவரின் இயற்பெயர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம். இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. 1955 அளவில் இவரது முதலாவது சிறுகதையான 'போலிக் கௌரவம்' ஈழகேசரியில் பிரசுரமானது. இவரது கதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது "குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" ஆகிய நூல்கள் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளன.
பெண்களின் சமூக விடுதலைக்கான கருத்துக்களை மையமாகக் கொண்டு கதைகளை எழுதும் போது, குடும்பப் பிணைப்பு சிதையாமல் சமூகப்பொறுப்புடன் எழுதுவார். இவரின் சிறுகதைகள், வாசிப்போருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கும். இவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஏனோ தானோ என வாழாமல், இப்படித் தான் வாழ வேண்டும் என தமக்கென கருத்துக் குறிப்புக்களை வகுத்து அதன் படி வாழ்வதாகவே அமைந்துள்ளன.
இலங்கையின் பல்வேறு பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வந்துள்ளன. சிறுகதைகள் மட்டுமன்றி கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றிலும் தம் ஆளுமையைக் காட்டியுள்ளார். ஐவருடன் சேர்ந்து "மத்தாப்பு" என்ற குறுநாவலில் மஞ்சள் வர்ணத்தை வைத்து ஒரு அத்தியாயத்தை எழுதியுள்ளார். மாணிக்கம் சஞ்சிகையில் பிரபல எழுத்தாளர்கல் சிலருடன் சேர்ந்து "கடல் தாரகை" என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இவர் சிறந்த சொற்பொழிவாளர். பல இலக்கிய வெளியீடுகளில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
1954 ம் ஆண்டிலிருந்து சிறுகதை, கட்டுரை, கவிதை என இவரின் ஆக்கங்கள் தொடங்கின. இவர் எழுதிய சிறுகதைகளுட் பிரபலமான சில:
- வாழ்வைத் தேடு.
- பிரிவும் இன்பம் தரும்.
- ஆளுமைகள் அழிகின்றன.
- ஒரு படம் பூரணத்துவம் பெறுகின்றது.
- அவள் கொடுத்த விலை.
- வாழ்க்கையின் திருப்பங்களும் வானத்துக் குழந்தைகளும்.
இவர் எழுத்துலகிற்கு வந்து சென்ற வருடத்துடன் 50 ஆண்டுகள் ஆகும். தற்போது ஆவ்ர் "யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்விப் பரம்பரியம் - 18ம் 19 ம் நூற்றாண்டு ஓர் ஆய்வு" என்ற ஆராய்ச்சி நூல் எழுதுவதில் செயற்பட்டுள்ளார்.