குவாண்டம் பொறிமுறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குவாண்டம் பொறிமுறை (குவாண்டம் பொறியியல் என்றும் அழைக்கப்படும்) என்பது நியூட்டன் அவர்கள் அளித்த பொறிமுறையையும் மாக்ஸ்வெல் அவர்கள் அளித்த மின்காந்தவியலையும் திருத்தி அவற்றினும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஓர் இயற்பியல் கூறாகும். தற்கால இயற்பியலின் பெரும்பகுதி குவாண்டம் பொறிமுறையையும், அல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் சார்பியல் கோட்பாட்டையுமே அடிப்படையாய்க் கொண்டுள்ளது.
குவாண்டம் என்ற சொல் ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். அதன் பொருள் எவ்வளவு என்ற கேள்வியாகும். இக்காலத்தில் இச்சொல் பொட்டலம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. குவாண்டம் பொறிமுறையின்படி, இயற்கையின் அடிப்படைக் கூறுகள் தொடர்ந்து பிரிக்கக்கூடியவை அல்ல. உதாரணமாக, ஒளி அலை எனக் கருதப்பட்டாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் பிரிக்கப்பட முடியாதது ஆகும். இது போலவே இடமும் காலமும் கூட ஒரு அளவுக்கு மேல் சிறியதாக்கப்பட முடியாது என்பது குவாண்டம் பொறிமுறையின் துணிபு ஆகும்.
குவாண்டம் இயற்பியல் நியூட்டனின் இயற்பியலுடன் அடிப்படையிலேயே வேறுபடுகின்றது. நியூட்டனின் இயற்பியலில் நாம் இயற்கையின் போக்கை மாற்றாமல் அதனை ஆராய முடியும் எனக் கருதப்பட்டது. ஆனால் ஹைஸன்பர்க், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், இக்கருத்து தவறு என நிறுவினார். நாம் இயற்கையின் ஒரு பகுதியைக் கவனிக்கும் செயலே(the act of observation) அதன் போக்கை மாற்றும் என அவர் நிறுவினார். இதனால் நியூட்டனின் இயற்பியலில் இருந்து வந்த முழுக்க விலகிய நோக்கு (entirely objective view of the universe) எனும் கோட்பாடு நீங்கியது. அளவீடு என்பது ஒதுக்கப்பட்டு விட முடியாத ஒரு பகுதியானது. மேலும், ஒரு எலெக்ட்ரானின் இடத்தை நிர்ணயிக்கச் செய்யப்படும் ஒரு அளவீட்டினால் அதன் திசைவேகம் மாறிப்போகும் என்பதால் அதன் இடத்தையும், திசைவேகத்தையும் (சரியாகச் சொன்னால் அதன் இடத்தையும், அதன் உந்தத்தையும் (momentum)) ஒரே நேரத்தில் மிகச்சரியாக நிர்ணயிக்க முடியாது என்று அறிவித்தார் அவர். இது இன்னாளில் ஹைஸன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கை (Heisenberg's Uncertainty principle) என அழைக்கப்படுகிறது. இதுவே குவாண்டம் இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடாகும். இதனால் இயற்கையின் அடிப்படை இரகசியங்கள் முழுவதையும் மனிதன் அறிவியலால் அறிந்து கொள்ள முடியும் என்ற கொள்கை வீழ்ந்தது.