சொல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு..
[தொகு] தொல்காப்பியத்தில் விளக்கம்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் (தொல். 155) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். 158 ஆவது நூற்பாவில்
சொல் எனப் படுப பெயரே வினையே என்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே
என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்து ஒரு மொழி என்று பெயர்.
[தொகு] பகாப்பதம்
பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது சேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். காட்டாக நாய், மரம், வா.
தமிழ் இலக்கணம் (நூல்) தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்:
- நிலம், நீர், மரம் - பொயர்ப்பகாப்பதம்
- நட, வா, உண் - வினைப்பகாப்பதம்
- மற்று, ஏ, ஒ - இடைப்பகாப்பதம்
- உறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்
[தொகு] பகுபதம்
பகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் பகுபதம் ஆகும். பகுபதங்களை பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.