டொராண்டோ தமிழியல் மாநாடு, 2007
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற இரண்டாவது தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2007ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெறும்.
வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர்.
[தொகு] மாநாட்டின் இலக்கு
தமிழர்கள் ஒரு கூட்டுக் குழுமமாக எப்படி உருவாகி வந்திருக்கிறார்கள்? இதன் தொடர்ச்சி, மாற்றங்கள் ஆகியவை யாவை? இதனை எப்படிப் புரிந்துகொள்வது போன்ற சவால்மிக்க கேள்விகளை புலமைத்துவம் சார்ந்து நாங்கள் எழுப்பவேண்டியுள்ளது. “தேசியம்”, “அடையாளம்” குறித்த கேள்விகள் அரசியல் , சமூக இயக்கங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளதோடு தமிழ் வழங்கும் இடங்களில் சுயத்தை நிர்ணயிப்பதாகவும் விளங்குகின்றன. மேலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு “தமிழத்தன்மை” குறித்த உணர்வை மறு உருவாக்கவும் விளக்கவும் “தேசியம்”, “அடையாளம்” என்பதன் தொடர்ச்சியும் சிக்கல்களும் மிக முக்கியமாகின்றன.
எனவே தென்னிந்தியா, ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழ் வழங்கும் இடங்களுக்குள்ளே உள்ள இனத்துவ அடையாங்களின் உருவாக்கம், விரிவாக்கம், மாற்றம், புரிதல், தர்க்கம் போன்றவற்றின் வரலாற்றை, வரலாற்றினுhடாகவும் கற்கைநெறிவழியாகவும் விளக்கும் கட்டுரைகளைப் படைக்கக் புலமையாளர்களை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.
தமிழியல் கல்வியில் தமிழ்ப் புலம்பெயர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், சில அரங்குகள் புலம்பெயர் சமூகத்தின் மொழிப் புழக்கம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே தனியாக ஆராய்கின்றன.
ஆகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டிருக்கும் தொறொன்ரோவில் தமிழியல் கல்வி வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாநாடுகள் அமைகின்றன. (தமிழியல் கல்வி பற்றிய விவரங்களை www.tamilstudies.org என்ற இணையத் தளத்தில் பார்க்கவும்).
[தொகு] ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டின் இலக்குகள்
- வட அமெரிக்காவின் தமிழியல் கல்வி மையமாக ரொறன்ரோவை உருவாக்குவது.
- தொறொன்ரோ தமிழ்ச் சமூகத்தை தொறொன்ரோ பல்கலைக்கழகத்துடனும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுடனும் புத்தாக்க வழியில் மாநாட்டின் வழி இணைப்பது.
- வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்கள் தங்களது படைப்புகளை சக கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையில் படைக்க ஒரு தொடர்ச்சியான வாய்ப்பை உருவாக்குவது.
- தொறொன்ரோ மாணவர்களுக்கு தமிழியல் கல்வியின் விரிந்த தளத்தையும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியை மேற்கொண்டிருக்கும் கல்வியாளர்களையும் அறிமுகப்படுத்துவது.
- தமிழ்நாடு, ஈழம் தொடர்பான கல்விகளில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்கள் தங்களது ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், இந்தத் தமிழ் வழங்கும் இடங்கள் குறித்த கல்வியை பரந்த ஒப்பீட்டு முறையில் அணுகவும் வகைசெய்வது.
- தமிழர் புலம்பெயர்வை உயர்கல்வித் துறையில் ஒரு முக்கிய பாடமாக்குவதும் அது தொடர்பான ஈடுபாட்டை ஏற்படுத்துவதும்.
- மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகளை நுhலாக வெளியிடுவது.