தந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தந்தம் என்பது மிக நீளமாக வளர்ச்சியடைந்த யானையின் பல்லினைக் குறிக்கும். யானையின் மேல் தாடையில் உள்ள இரண்டு முன்னம் பற்களும் வளர்ந்து தந்தங்களாகின்றன. யானையின் தந்தமானது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். இவை பொதுவாக ஆண்டுக்கு ஏழு அங்குலம் வரை வளர்கின்றன.
ஆப்பிரிக்க யானைகளில் களிறு (ஆண்), பிடி (பெண்) இரண்டுமே நன்கு வளர்ச்சியடைந்த தந்தங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் தந்தம் பத்து அடி நீளம் வரை வளரக்கூடியது. 90 கிலோ வரை எடை கொண்டது. ஆசிய யானைகளில் களிறுகளுக்கு மட்டுமே நீளமான தந்தங்கள் உண்டு. பிடிகளுக்கு மிகச்சிறியதாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம். ஆசிய யானைத் தந்தங்களின் நீளம் ஆப்பிரிக்க யானைகளை ஒத்திருந்தாலும் அவை சன்னமானவை.
யானையின் தந்தம் மிகவும் மென்மையானது. அதனால் இவை செதுக்குவதற்கும் துருவுவதற்கும் வசதியாக இருப்பதால் சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதால் தந்த விற்பனை தடை செய்யப் பட்டுள்ளது.