தனிநாயகம் அடிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தனிநாயகம் அடிகள் (Rev.Father Xavier S.Thani Nayagam, (ஆகஸ்டு 2, 1913 - செப்டம்பர் 1, 1980), கரம்பன், யாழ்ப்பாணம்) உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர்.
பொருளடக்கம் |
[தொகு] பிறப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் பிறந்த தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும்.
[தொகு] கல்வி
ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
[தொகு] ஆசிரியப் பணி
தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரசால் உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப் பணியாற்றினார், இங்கு இருந்தபோது பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
[தொகு] தமிழ்ப் பணி
கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil Culture (தமிழ்க் கல்ச்சர்) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார்.
[தொகு] தமிழாராய்ச்சி நிறுவன தாபகர்
மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தாபகர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். பின்னர் 1966-இல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
[தொகு] மறைவு
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ர தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.