நாத்திகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கடவுளின் என்று ஒன்று உண்டு என்னும் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் அறவே மறுக்கும் கொள்கையும் நிலைப்பாடும் நாத்திகம் ஆகும். நாத்திகம் என்ற வடமொழிச்சொல்லுக்கு இணையாக இறைமறுப்பு என்ற சொல் தமிழ் சூழலில் வழங்கிவருகிறது. கீழைநாட்டு மெய்யியலில் மிகத் தொன்றுதொட்டு வழங்கி வரும் மெய்யியல் நிலைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும் மேலைநாட்டு மெய்யியல் மரபிலும் இறைமறுப்பு வாதத்திற்கான சான்றுகள் நிறைய காணக்கிடைக்கின்றன. இந்தியச் சூழலில் பௌத்தம் சமணம் போன்ற மதங்கள் கூட இறைமறுப்பு வாதத்தையே முன்வைத்தன.
அண்மைக்கால தமிழ்ச் சூழலில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம், மார்க்சிய மெய்யியலை தமது அரசியல் நிலைப்பாடுகளுள் உள்ளடக்கியிருக்கும் இடதுசாரி இயக்கம் போன்றன இறைமறுப்பியலை அரசியல் நிலைப்பாடுகளுள் ஒன்றாக கைக்கொண்டன.