புக்கர் பரிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புக்கர் பரிசு அல்லது புனைகதைகளுக்கான மான் புக்கர் பரிசு எனப்படும் இப் பரிசு, சிறந்த ஆங்கில மொழியில் எழுதப்படும் முழுநீள நவீனத்துக்கு (novel) பிரிட்டனால் வழங்கப்படும் பரிசாகும். பிரித்தானியாவின் தலைமையிலான பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் நவீனங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது. இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பரிசுகளில் ஒன்றாக இது திகழ்கின்றது. புனைகதை எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.
[தொகு] பின்னணி
அறுபதுகளின் இறுதியில், ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும் பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் (Tom Maschler) என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம் பெற்றுவந்த புக்கர் பிரதர்ஸ் என்னும் நிறுவனத்தை அணுகி, எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார். ஆரம்பத்தில் இது புக்கர்-மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, மான் குரூப் என்னும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், புக்கர் என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள், பரிசின் பெயரை புனைகதைகளுக்கான மான் புக்கர் பரிசு என மாற்றினர்.
முன்னர் £21,000 ஆக இருந்த பரிசுத்தொகை, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் £50,000 ஆக உயர்த்தப்பட்டது.
இந்தியப் பெண் எழுத்தாளரான அருந்ததி ராய் 1997 இல் இப்பரிசைப் பெற்றார். 2006 ஆம் ஆண்டுக்கான பரிசும் இந்தியாவில் பிறந்த கிரண் தேசாய் என்னும் பெண்ணுக்கே வழங்கப்பட்டுள்ளது.
[தொகு] வெளியிணைப்புகள்
- மான் புக்கர் பரிசின் அதிகாரபூர்வ வலைத்தளம் (ஆங்கிலத்தில்)
- மிகவும் கௌரவம் தரப்பட்ட புக்கர் தெரிவு நூல்கள் (ஆங்கிலத்தில்)
- மான் புக்கர் பரிசுகள் 1969 - 2005 (ஆங்கிலத்தில்)