பேராதனை தாவரவியற் பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா பேராதனை தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றாலாத்துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது.
[தொகு] அமைவிடம்
இப் பூங்கா, இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி நகரிலிருந்து 6.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பேராதனை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையில் தலை நகரான கொழும்பிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப் பூங்காவின் மூன்று பக்கத்தைத் தழுவியபடி இலங்கையின் மிக நீளமான நதியாகிய மகாவலி கங்கை ஓடுகிறது. இப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 147 ஏக்கர்கள் ஆகும்.
[தொகு] வரலாறு
14 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது. 1371 இல் அரசன் மூன்றாம் விக்கிரமபாகு இவ்விடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டான். 1747 - 1780 வரை கண்டியை ஆண்ட இராஜாதிராஜசிங்கனும், இவ்விடத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்ததாக அறியப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர். இப்பகுதி அவர்கள் கைக்கு மாறியது.
1810 இல் கொழும்புக்கு அண்மையிலுள்ள கும்பனித்தெரு என இன்று அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியர் ஒரு தோட்டத்தை அமைத்திருந்தனர். பின்னர் 1813 இல், இது களுத்துறை என்னும் இடத்துக்கு மாற்றப்பட்டது. இது பொருளாதாரத் தாவரங்களான கோப்பி, இறப்பர் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இடமாகவேயிருந்தது. 1814 இல் இதைப் பொறுப்பேற்ற அலெக்சாண்டர் மூன் என்பவரின் முயற்சியால் இது 1821 இல் தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கோப்பி, இறப்பர் போன்ற தாவரங்களே இங்கு காணப்பட்டன. பிற்காலங்களில் இதனைப் பொறுப்பேற்று நடத்திய அதிகாரிகள் பலரது முயற்சியால் எராளமான தாவர வகைகள் சேர்க்கப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது.
[தொகு] சிறப்பம்சங்கள்
இப் பூங்காவில் இன்று ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் உள்ளன. இங்குள்ள ஓக்கிட் பூங்கா புகழ் பெற்றது. இங்குள்ள வாசனைத் திரவியத் தோட்டம், கற்றாளையகம், அந்தூரியம் வளர்ப்பகம் என்பன இங்குள்ள சிறப்பம்சங்களாக உள்ளன.