முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவன் மகேந்திரவர்மன். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் பல்லவ அரசனான சிம்மவிட்டுணுவின் மகனாவான். இவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் நாட்டில் இவனது ஆட்சிக்காலம் பல்வேறு திருப்பங்களைக் கொண்ட ஒரு பொற்காலமாக விளங்கியதெனலாம். சமயத்துறையில் இந்து சமயம் மறுமலர்ச்சி கண்டது.