மௌ டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மௌ டம் (Mau tam) என்பது 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூங்கில் மரங்கள் எல்லாம் ஒருசேரப் பூத்து மடியும் ஒரு விந்தையான சுற்றுச்சூழல் நிகழ்வைக் குறிக்கும், மூங்கிற் சாவு எனப்பொருள்படும் மிசோ மொழிச் சொல்லாகும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தின் நிலப்பகுதியில் முப்பது விழுக்காடு பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன.[1]
பொருளடக்கம் |
[தொகு] இயங்கமைவு
மௌ டம் நிகழ்வின்போது மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கின்றன. இதைத் தொடர்ந்து பெருச்சாளிகள் அளவுக்கதிகமாகப் பெருகிவிடுகின்றன. இதன் விளைவாக பிளேக் நோய் பரவ வாய்ப்புண்டாகிறது. [2]
சில மூங்கில் மரங்கள் இந்த வழக்கத்திற்கு மாறாக ஒருசேரப் பூக்காமல் இடையே பூப்பதுண்டு. ஆனால், அவ்வமயங்களில் சில விதைகளே உருவாவதால் அவற்றில் பெரும்பாலானவை பெருச்சாளிகளிக்குத் தீனியாகிவிடுகின்றன. இதனால் அவற்றின் மரபுவழித்தோன்றல் முற்றுப் பெறுகிறது. நெடுங்காலம் இவ்வாறு நடைபெறுவதால் மூங்கில்களில் பெரும்பாலானவை ஒருசேரப் பூக்கத் துவங்குகின்றன. இம்முறையிலான உய்வு உத்தியை (survival strategy) கோண்மா தெவிட்டும் மலிவு (predator satiation) என்று அழைப்பர்.[3] இதே உத்தியை குறிஞ்சி செடிகளும் 12 ஆண்டுகளுக்கொருமுறை பூப்பதின் மூலம் பயன்படுத்துகின்றன.[4] சில நேரங்களில், இவ்வுத்தியைக் கையாளும் உயிரினங்களுக்கு எதிரான கொன்றுண்ணிகளின் இனப்பெருக்க சுழற்சியும் இறையின் இனப்பெருக்க சுழற்சியின் ஒரு பகுப்பாக அமையக் கூடும். இவ்வாறான கொன்றுண்ணிகளிடமிருந்து மீளும்விதமாக சில உயிரினங்கள் 11, 13 போன்ற பகா எண் (prime number) ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன!
மூங்கில் பூப்பிற்குப் பிறகு விதைகள் உருவாகி மூங்கில் மரங்கள் மடிந்து விடுகின்றன. மண்ணில் விழுந்த மிகுதியான விதைகளை பெருச்சாளிகள் உண்கின்றன. இவ்விளைச்சலை எதிர்நோக்கியே மூங்கில் பூப்பின்போது பெருச்சாளிகள் இனப்பெருக்கத்திற்கான கூடுதல் உந்துதல் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விதைகளை உண்டு முடித்த பின்னர் இவை பயிர்களை அழிக்கத் துவங்குகின்றன. இதன் விளைவாக பஞ்சம் ஏற்படுகிறது.
[தொகு] மிசோரத்தில் சமூக தாக்கம்
ஆங்கிலேயர் ஆட்சியின் பதிவுகளின்படி மிசோரம் மாநிலத்தில் இதேபோல் மூங்கில் மிகுபூப்பை அடுத்து பெரும் பஞ்சம் ஏற்பட்டதெனத் தெரிகிறது. இதே போல் 1958-ல் மௌ டம் நிகழ்வின்போது இதனால் பஞ்சம் ஏற்பட்டது என வயதுமுதிர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது இப்பகுதி அஸ்ஸாம் மாநிலத்தின்கீழ் இருந்தது. மக்களின் முன்னெச்சரிக்கையை மதிக்காத அரசை எதிர்த்து மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு, பின்னர், மிசோ தேசிய முன்னணி என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணியிலிருந்த லால்தெங்கா மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபின் முதல்வரானார். அவருடன் போராளிக்குழுவில் முக்கிய பங்கு வகித்த சோரம்தெங்கா தற்போது அம்மாநில முதலமைச்சராக உள்ளார். இந்த அளவிற்கு மிசோரம் மக்கள் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இந்நிகழ்வை எதிர்நோக்கி இந்திய இராணுவம் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முனைந்துள்ளது.
[தொகு] மாற்று ஏற்பாடுகள்
சோரம்தெங்கா அரசு இந்த முறை மௌ டம் நிகழ்வை எதிர்நோக்கி இரு ஆண்டுகளாகத் தயார்நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது இந்திய இராணுவத்தின் துணையை நாட வேண்டியதுள்ளது.[5] இராணுவமும் மாநில நிர்வாகமும் இணைந்து எலிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளை மக்களுக்குத் தெரிவிக்கின்றன. மேலும் மஞ்சள், இஞ்சி போன்ற செடிகளைப் பயிரிடுமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவற்றைப் பயிரிடுவதால் மக்களின் வாங்கு திறன் பாதிக்கப்படுவது குறையும் என்றும், வாசனைப் பயிர்களின் விளைவாக கொறிணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் நம்பப்படுகிறது.[6]
[தொகு] மிசோரம் தவிர பிற இடங்களில்
இதேபோன்ற ஒருமித்த மூங்கில் பூப்பை ஒட்டிய எலிகளின் அளவுக்கதிகமான இனப்பெருக்கம் அண்டை மாநிலங்களான அருணாசல பிரதேசம், மணிப்பூர், மற்றும் நாகாலாந்து,[6] ஆகியவற்றிலும், லாவோஸ், மடகாஸ்கர், ஜப்பான் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் ஏற்படுகின்றது.[7]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ மிசோரம் மூங்கில் வளர்ச்சித்துறை(ஆங்கிலத்தில்)
- ↑ Peter Foster, மூங்கில் காரணமாக இந்திய மாநிலத்தில் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு, 14 அக்டோபர் 2004(ஆங்கிலத்தில்)
- ↑ வில்சன், மேரி, டிராவசெட், அன்னா (1992). The Ecology of Seed Dispersal (விதைப் பரவுதலின் சூழலியல்). Seeds: The ecology of regeneration in plant communities இரண்டாம் பதிப்பு: 85-110.(ஆங்கிலத்தில்)
- ↑ த ஹிந்து நாளிதழில் செந்தில் சுப்ரமணியம்
- ↑ இந்திய இராணுவத்தின் பங்கு பற்றிய பி.பி.சி. செய்தி(ஆங்கிலத்தில்)
- ↑ 6.0 6.1 இந்தியாவில் எலி மூலம் சிக்கல், தீர்வு வழிகள் (PDF format)
- ↑ லாவோஸ் மேடுகளில் எலிச்சிக்கல்: வரலாற்றுப்பாங்குகளைப் பற்றிய பகுப்பாய்வு (PDF format) (ஆங்கிலத்தில்)