இரோகுவாயிஸ் உறவுமுறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆறு வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ள உறவுமுறை முறைமைகளுள் இராகுவாயிஸ் உறவுமுறை முறைமையும் ஒன்று. எஸ்கிமோ, ஹவாய், குரோ, ஒமஹா, சூடான் என்பன ஏனைய இந்து முறைமைகள் ஆகும். லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பவர், 1871 ஆம் ஆண்டில், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான இரோகுவோய்ஸ் மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தும்போது இம்முறையை முதன் முதலில் அறிந்து கொண்டதனால் இம் முறைமைக்கு அந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்டது.
இம் முறையில் தாய் தந்தையருடன் பிறந்த ஒத்த பாலினரைத் தாய் தந்தையரைக் குறிக்கும் உறவுமுறைப் பெயராலேயே அழைக்கும்போது, அவர்களுடன் பிறந்த எதிர்ப் பாலார் வேறு உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, தந்தையின் சகோதரர்களை, சிறிய தந்தை, பெரிய தந்தை, சித்தப்பா, பெரியப்பா எனத் தந்தை உறவு நிலையிலும், தாயின் சகோதரிகளை, சின்னம்மா, பெரியம்மா, சிற்றன்னை, பெரியன்னை எனத் தாய் உறவுநிலையிலும் வைத்துப் பார்க்கும் இம்முறை, தந்தையின் சகோதரிகளையும், தாயின் சகோதரர்களையும், அத்தை, மாமி, அம்மான், மாமா போன்ற உறவுப் பெயர்களினால் குறிப்பிடுகின்றது.
பெற்றோருடன் பிறந்த ஒத்த பாலாரின் மக்களையும், எதிர்ப் பாலாரின் பிள்ளைகளையும் வேறாகப் பிரித்துக் காண்பதும் இம்முறைமையின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்றாகும். அதவது, இம்முறையில், தந்தையின் சகோதரனின் பிள்ளைகளும், அவர் சகோதரியின் பிள்ளைகளும் வெவ்வேறு உறவுப் பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். இதேபோல, தாயின் சகோதரனின் பிள்ளைகளும், தாயின் சகோதரியின் பிள்ளைகளும் வெவ்வேறு உறவுமுறைப் பெயர்களினால் குறிக்கப்படுகின்றனர். அதே சமயம், தாயின் சகோதரியினதும், தகப்பனின் சகோதரனதும் பிள்ளைகளும், பேசுனரின் சொந்தச் சகோதரர்களும் ஒரே உறவுப்பெயரால் (அண்ணன், தம்பி, அக்கா, தங்கை) குறிக்கப்பட, தாயின் சகோதரனினதும், தந்தையின் சகோதரியினதும் பிள்ளைகள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஒரே உறவுமுறைப் பெயரைக் (மச்சான், மச்சாள்) கொண்டுள்ளனர்.
பெற்றோரின் எதிர்ப் பால் உடன்பிறந்தோரின் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இம்முறையைக் கைக்கொள்ளும் இனத்தினர் மத்தியில் காணப்படுவதாலேயே இவ்வேறுபாடு காட்டப்படுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.
தமிழர் உறவுமுறையும், ஏனைய திராவிட இனத்தவர் உறவு முறைகளும், இரோகுவோயிஸ் முறையைச் சேர்ந்தவையே. இம்முறை, தென்னிந்தியா, [இலங்கை], பிஜித்தீவுகள், அமெரிக்காவின் சில பகுதிகள், ஆப்பிரிக்காவின் பகுதிகள் முதலிய பல பகுதிகளில் காணப்படுகின்றது.
[தொகு] தமிழர் உறவுமுறை
தனிக்கட்டுரை: தமிழர் உறவுமுறை
தமிழர் உறவுமுறையில் உள்ள பின்வரும் அம்சங்கள் அதனை இரோகுவோயிஸ் உறவுமுறையில் வகைப்படுத்தியுள்ளது.
- தந்தையின் அண்ணன், தம்பி ஆகியோரையும் தந்தையின் உறவுநிலையிலேயே கருதுவதுடன் உறவுப் பெயர்களும் அதனை வெளிக்காட்டுவது,
- தாயின் அக்கா, தங்கை ஆகியோரைத் தாய் உறவு நிலையில் பார்ப்பதும், அவர்களுக்கான உறவுப் பெயர்கள் அதைப் பிரதிபலிப்பதும்,
- தந்தையின் அக்கா, தங்கை, தாயின், அண்ணன், தம்பி ஆகிய எதிர்ப்பால் உடன் பிறந்தாரின் உறவுப் பெயர்கள் வேறுபட்டிருப்பது,
- தந்தையின் அண்ணன், தம்பி பிள்ளைகளும், தாயின் அக்கா, தங்கை பிள்ளைகளும், பேசுனரின் அண்ணன் தம்பி, அக்கா, தங்கை போலவே கருதப்படுவதும், அவர்களின் உறவுப்பெயர்களும் அவ்வாறு அமைந்திருப்பதும்,
- தந்தையின் அக்கா, தங்கை, தாயின் அண்ணன், தம்பி ஆகியோரின் பிள்ளைகள் தனித்துவமான உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுதல்.
கீழே தரப்பட்டுள்ள தமிழர் உறவுப் பெயர் அட்டவணை இதனை விளக்குகிறது.
தந்தை சகோதரி | தந்தை சகோதரன் | தந்தை | தாய் | தாய் சகோதரி | தாய் சகோதரன் |
---|---|---|---|---|---|
அத்தை | பெரியப்பா, சித்தப்பா | அப்பா | அம்மா | பெரியம்மா, சின்னம்மா | அம்மான், மாமா |
அத்தை பிள்ளைகள் | பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் | சொந்தச் சகோதரர் | பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகள் | மாமா பிள்ளைகள் | |
மச்சான் | ஒன்றுவிட்ட அண்ணன் | அண்ணன் | ஒன்றுவிட்ட அண்ணன் | மச்சான் | |
- | ஒன்றுவிட்ட தம்பி | தம்பி | ஒன்றுவிட்ட தம்பி | - | |
மச்சாள் | ஒன்றுவிட்ட அக்கா | அக்கா | ஒன்றுவிட்ட அக்கா | மச்சாள் | |
- | ஒன்றுவிட்ட தங்கை | தங்கை | ஒன்றுவிட்ட தங்கை | - |