இஸ்தான்புல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந் நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் இதனைக் கொன்ஸ்டண்டினோப்பிள் என அழைத்து வந்தனர். 41° வ 28° கி இல் பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந் நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 - 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 - 1453 வரை பைசண்டைன் பேரரசின் தலைநகராகவும், 1453 - 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.