ஒடிசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப் படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.
வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்.
[தொகு] நடன முறை
ஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்ஷம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.
ஒடிசி நடனத்தின் இன்றைய வளர்சிக்குக் காரணமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பணிகிரஹியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ராவுட், குரு தேவ்பிரசாத் தாஸ் ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்.