கிடை வரிசை (தனிம அட்டவணை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிடை வரிசை என்பது தனிமங்களின் அட்டவணையில் இடமிருந்து வலமாகச் செல்லும் கிடைவரிசைத் தனிமங்கள் ஆகும். அணுவெண்கள் கூடக் கூட அவை இடமிருந்து வலமாக அடுக்கப்படுகின்றது. தனிமங்களின் அட்டவணையில் மொத்தம் 7 கிடை வரிசைகள் உள்ளன. இடமிருந்து வலமாக கிடை வரிசையில் படுக்கை வாட்டில் வரிசை வரிசையாக வைத்துள்ள தனிமங்கள் ஒத்த பண்புள்ள தனிமங்கள் நெடுங்குழுவாய் மேலிருந்து கீழாக வருமாறு தனிமங்களின் அட்டவணையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி மீண்டும் மீண்டும் ஒத்த பண்புடைய தனிமங்கள் நெடுங்குழுவில் ஒன்றன் கீழ் ஒன்றாக அமையுமாறு அமைப்பதாலேயே இதற்கு ஆவர்த்தன அட்டவணை அல்லது சீரடுக்கு/சீர் சுழற்சி அட்டவணை என்று பெயர்.
தற்கால குவிண்டம் இயங்கியல் (குவாண்டம் இயங்கியல்) கோட்பாடுகளின்படி அணுவெண் கூடக் கூட, எதிர்மின்னிகளின் சுழல் பாதைகளும் (அதில் அடுக்கப்படும் எதிர்மின்னிகளின் எண்ணிக்கையும்) சீராக விரிந்துகொண்டே போகும். எனவே கடைசி எதிர்மின்னிச் சுற்றுப்பாதையில் நிறைவுறாது நிற்கும் அல்லது எச்சாக நிற்கும் எதிர்மின்னிகளே வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளுகின்றன. இவையே இயையினி எண்களாகும் (valency). இவையே அத் தனிமங்களின் பண்புகளை நிறுவுகின்றது. எனவே கிடைவரிசையில் முறையாக அனுவெண் கூடக் கூட இடமிருந்து வலமாக அடுக்கப்படும் தனிமங்கள் ஒத்த இயையினி எண்கள் கொண்டவை நெடுங்குழுவாக அமைகின்றன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்களில் உள்ள எதிர்மின்னிகளின் சுற்றுப்பாதைக் கூடுகள் வரிசைப்படி கீழே தரப்பட்டுள்ளன.
1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s 5g 6f 7d 8p ...