சாளுவன்குப்பம் புலிக்குடைவரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாளுவன்குப்பம் புலிக்குடைவரை என அழைக்கப்படும் குடைவரை ஒன்று தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோயில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடையே இது என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையை அண்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது.