சொத்துரிமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை" - வள்ளுவரின் திருக்குறள் வாசகம் இது!.
இத்தகைய பொருட்செல்வத்தோடு தொடர்புடைய "சொத்து" என்கிற சொல்லானது பல்வேறு ஊகங்களுக்கு இடமளிக்கிற ஒரு பதமாக விளங்குகிறது, சட்டத்தின் பார்வையில் சொல்ல வேண்டுமானால் சொத்து என்பது உடைமை மற்றும் சொந்தத்தின் காரணமாக எழக் கூடிய உரிமைகளாகும்.
சொத்துக்கள் பெரும்பாலும் புலன் நுகர் பொருட்களாகவே அடையாளங்காணப்படுகின்றன. ஆயினும் சொத்தினுடைய மதிப்பு என்பது அதன் பயன்பாட்டினோடு கூடிய ஞானத்தினால் விளைகிறது. "பயன்பட்டின் ஞானம்" என்பது மாறக்கூடியதாய் சாரமற்று இருப்பதால் சொத்து குறித்த சிந்தனையை மேலும் கடினமாக்குகிறது.
சிந்தனைகளையும் நுட்பமான வழிமுறைகளையும் செலுத்துவதன் மூலம் மனிதனுடைய தேவைகளை ஒரு பொருள் பூர்த்தி செய்கிறபோது வளமாகின்றது. இவ்வளமானது பொருள் வளம் மற்றும் அதனை பயன்படுத்தக் கூடிய சிந்தனைவளம் என இரு உருவம் பெறுகிறது. ஒரு பொருளின் பொருட்டு இவ்விரு வளங்களும் ஒருங்கிணைகிற போது அதுவே சொத்தாகிறது. இத்தகைய சொத்தானது திருப்தியையும் உரிமைகளையும் தருகின்றது.
இச்சொத்துகள் புலன்களால் நுகரக் கூடியதாகவும் இயலாததாகவும் இருவகைப் படும். நிலம் மற்றும் அசையும் பொருட்களான வாகனங்கள் முதலியன புலன் நுகர் சொத்தின் கீழ் வருபவை. பதிப்புரிமை, வர்த்தகமுத்திரை, சுயயுரிமை முதலியன புலன் நுகராச் சொத்துக்களின் கீழ் வருகின்றன. சொத்து என்பது சாதாரணமாக ஒரு பொருளைக் குறித்தாலும் சட்டத்தின் பார்வையில் அப்பொருளின் மீதுள்ள நாட்டத்தினையே உணர்த்தி நிற்கிறது.
சொத்து குறித்த ஒவ்வொரு சட்டமும் அத்தகைய பிற சட்டங்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன. நடைமுறையில், சொத்து குறித்த ஒவ்வொருச் சட்டமும் ஏனைய சட்டங்களோடு சீர்தூக்கி சமன்செய்யும் பொருட்டு தனித்தன்மை வாய்ந்ததாக வகுக்கப்பட்டு விளக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு சுயயுரிமைக் குறித்த சட்டங்களில் அவற்றையுடைய நபரின் உரிமைகள், பொதுமக்கள் பயன்படுத்துவற்கான உரிமைகளோடு சீர்தூக்கி சமன்செய்யப்படுகின்றது. கட்டாய உரிமங்கள், உரிமைகளின் காலாவதி, வரையறுக்கப்பட்ட கால அளவு முதலிய அளவுகோள்களைக் கொண்டு இது சாத்தியமாக்கப் படுகின்றது.
பகிர்ந்தளிக்கக் கூடிய நீதிமுறையினை உள்ளடக்கியதாகவே சொத்துரிமைச் சட்டங்கள் பெரும்பாலும் வழங்கி வந்திருக்கின்றன. சொத்தினை சார்ந்து எழக்கூடிய பிரச்சனைகளில் பெரும்பாலானவை சொத்தின் மீதான ஒரு வகை உரிமைக்கும் மற்றொரு வகை உரிமைக்கும் உள்ள முரண்பாடுகளால் எழுபவையே. அங்ஙனம் நேருகிற போது கொள்கைகளைக் கருத்தில் கொண்டு சமநிலையினை நிலைநாட்டுவது அரசாங்கம் மட்டும் சட்டத்தின் பொறுப்பாகின்றது.