நடராசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம் ஆகும். நடராசர் என்ற சொல் நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படும் சிவன் நடனத்தில் வல்லவனாக உருவகிக்கப்படுகிறான். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.
[தொகு] தோற்றம்
சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது.
மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன.
[தொகு] தோற்ற விளக்கம்
நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.