பூர்ஜ் துபாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துபாய்க் கோபுரம் என்னும் பொருள்கொண்ட அரபி மொழிப் பெயரான பூர்ஜ் துபாய் என்பது, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வானளாவியைக் (skyscraper) குறிக்கும். இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ் என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரைப்பெறும் நோக்கத்துடன் கட்டப்படும் இக் கட்டிடத்தின் உயரம், மாடிகளின் எண்ணிக்கை என்பன இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 808 மீட்டர் (2651 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்படுகிறது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறது. அண்மைக்காலக் கட்டுரையொன்றில், துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்று பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இது கட்டிடத்தின் உரிமையாளர்களான "இமார்" நிறுவனத்தினால் உறுதிசெய்யப்படவில்லை.