பெண்ணடிமைத் தனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனேக சமூகங்களில் பெண்களின் மனித, உளவியல், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பிற உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களுக்கு இணையாக அமையவில்லை. பல சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு பணி செய்யும் அல்லது ஆண்களின் கட்டுப்பாடுகளுக்குரிய அல்லது ஆண்களை சார்ந்து இருக்கும் மனிதர்களாகவே அடிமைத் தனமாக பயன்படுத்தப்பட்டார்கள். சுதந்திரங்கள் அற்றவர்களாகவும், ஆண் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருக்கும் நிலையை பெண்ணடிமைத் தனம் எனலாம். தற்காலத்தில் பெண்களின் நீண்ட போராட்டத்தின் பின்பு இந்த நிலை பெருதும் மாறிவருகின்றது.
[தொகு] தமிழர் சமூகத்தில் பெண்ணடிமைத் தனம்
[தொகு] சங்க காலம்
சங்ககாலத்தில் பெண்ணடிமைத்தனம் இருந்தது. பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தனது பாடலில் (பொதுவியல் 246) உடன்கட்டையேறும் வழக்கம் பற்றிப் பேசுகிறார்.
சங்க கால ஒளவை பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தவரா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் ஆண்களை உயர்வாக எண்ணியவர் என்பதில் சந்தேகமில்லை. எடுத்துக்காட்டுக்கு அவரின் பின்வரும் கூற்றை நோக்குக: 'எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே'.
சங்க காலத்தில் பெண்ணடிமைத்தனம், அவர்களே ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருந்தது. பரத்தைகள் ஒரு நோக்கில் பெண்ணடிமைத் தனத்தின் சமூக சூழலால் உருவானவர்களே. 'இற்பரத்தை, சேரிப்பரத்தை, காமப் பரத்தை, காதல் பரத்தை' எனும் தொல்காப்பியர்கால 'பரத்தைவகை'களின் குறிப்பில் இருந்து அன்று இவர்கள் தமிழ் சமூகத்தில் ஒரு அங்கமாக இருந்ததை அறிய முடிகின்றது.
சங்க இலக்கியக் காதல்-அகப் பாடல்களில் கூட, பெண்ணின் 'ஆண்சார்புத் தன்மை'யை ஏற்றுக் கொண்ட குரலையே கேட்க முடிகிறது. பெண்ணுக்கும் ஆணுக்கும் சங்க இலக்கியத்தில் வரையறுக்கப்படும் எதிர் எதிரான கடமைகளை கொண்டு இதை விளங்கிகொள்ளலாம். 'வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என்பது குறுந்தொகை (பாடல் 135). 'வினை' - பொருளீட்டும் வேலை; இதுவே, 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்பதும். இதற்கு நேர்மாறாக, பெண்கள் பொருளீட்டவோ, வேறெதற்குமோ கடல் கடந்து செல்லக் கூடாது 'முந்நீர் வழக்கம் மகடூவோ டில்லை' என்று தொல்காப்பியமே தடை போடுகிறது.
எட்டுத்தொகை முழுவதுமே பெண்ணின் இந்த 'ஆண்சார்புத்தன்மை' நிறையப் பாடல்களில் உறைந்துள்ளது. பின்வந்த பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு முதலாக காப்பியங்கள் பக்தி இலக்கியங்கள் எல்லாவற்றிலும் இது தொடர்வதையும், சிற்றிலக்கியங்களில் வெளிப்படையாகவும் வருவதைக் காணலாம். [1]
பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துவதில் வள்ளுவரும் விலக்கல்ல. அவர், 'பெண்வழிச் சேரல்' என்றெழுதினார். அதனால்தானே பிற்கால அவ்வையார், தனது ஆத்தி சூடி 63 வது வரியில் "தையல் சொல் கேளேல்" என்று எழுதுகிறார்.
[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ (இது தொடர்பாக ஆய்வு செய்ய விரும்புவோர், ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை', மைதிலி சிவராமனின் 'பெண் ஏன் அடிமையானாள்?', ராஜம் கிருஷ்ணனின் 'காலம் தோறும் பெண்',பிரேமா அருணாசலத்தின் 'தமிழ் இலக்கியங்கள் கூறும் பெண்ணடிமை வரலாறு', ர.விஜய லட்சுமியின் 'தமிழக மகளிர்-தொடக்க காலம் முதல் 6ம் நூற்றாண்டு வரை' முதலான நூல்களைப் பார்ப்பது இன்றியமையாதது.)