பௌலிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பௌலிங் (பந்துருட்டு?) என்பது ஒருவகை விளையாட்டு ஆகும். இவ் விளையாட்டில் மட்டமான ஒடுங்கிய தளமொன்றின் ஒரு முனையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பின் (pin) என அழைக்கப்படும் பொருள்களை நோக்கி மறு முனையில் இருந்து, விளையாடுபவர் இதற்கான பந்து ஒன்றை உருட்டி அப் பின்களை விழுத்த வேண்டும். பௌலிங் விளையாட்டுப் பலவகை வேறுபாடுகளுடன் விளையாடப்பட்டு வருகிறது. இவற்றுள், அமெரிக்காவில் விளையாடப்பட்டுவரும் பத்துப்பின் பௌலிங் (Ten-pin bowling) உலகின் பல இடங்களிலும் பரவலாக விளையாடப்படுகிறது. இதில் ஒரு வகை, 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே பண்டைய எகிப்து நாட்டில் விளையாடப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகச் சிலர் கூறுகிறார்கள்.
[தொகு] வரலாறு
மிகப் பழங்காலத்திலேயே இவ்விளையாட்டின் ஒரு வகை எகிப்தில் விளையாடப்பட்டதற்கான தடயங்கள் வரலாற்றாய்வில் வெளிப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு வந்தாலும், இது கி.பி. 300 ஆம் ஆண்டளவில் ஜெர்மனியிலேயே உருவானதாக வேறு சிலர் கூறுகிறார்கள். 14 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு மன்னர், தன்னுடைய படைகள் இவ்விளையாட்டை விளையாடக்கூடாது என்று விதித்த தடை தொடர்பான குறிப்பொன்று உள்ளது. இதுவே பௌலின் பற்றிக் கிடைத்துள்ள முதல் எழுத்துமூல ஆவணம் எனப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் குடியேறவாத ஆட்சி நிலவியபோது, ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள் மூலமாக இது அமெரிக்காவுக்கும் பரவியது.
அமெரிக்க பௌலிங் மாநாட்டு அமைப்பு (American Bowling Congress) தொடங்கப்பட்ட 1895 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி, நியூ யார்க் நகரத்தில், இவ்விளையாட்டுக்கான ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டன.
ஆரம்ப காலங்களில், பின்கள் இதற்கென அமர்த்தப்பட்டவர்களால் கையால் அடுக்கப்பட்டன. 1952 ல், முதன் முதலாகத் தானியங்கிப் பின் அடுக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது விளையாட்டைத் துரிதமாக விளையாட உதவியது. இதன் பின்னர் இவ்விளையாட்டு வேகமாகப் பிரபலமானது.
[தொகு] வகைகள்
பௌலிங் பல வகைகளாக உள்ளது. இவற்றை முக்கியமாக, உள்ளக விளையாட்டு, வெளிக்கள விளையாட்டு என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உள்ளக பௌலிங், மரம் அல்லது அதனைப் போன்ற வேறு செயற்கைப் பொருட்களினால் அமைக்கப்பட்ட தளங்களில் விளையாடப்படுகின்றது. இதனை லேன் (lane) என்பர். உள்ளக பௌலிங் விளையாட்டுக்களில் பின்வரும் வகைகள் முக்கியமானவை.
- பத்துப்பின் பௌலிங் (Ten-pin bowling) : இது 19 ஆம் நூற்றாண்டில் விளையாடப்பட்டு வந்த ஒன்பதுபின் பௌலிங் என்னும் வகையிலிருந்து விருத்தியானது.
- ஐந்துபின் பௌலிங் (Five-pin bowling) : இது கனடா நாட்டில் விளையாடப்படும் பௌலிங் வகை.
- காண்டில்பின் பௌலிங் (Candlepin bowling) : பத்துப்பின் பௌலிங்கின் ஒரு வேறுபாடு இது. கனடாவின் கிழக்குப் பகுதிகளிலும், நியூ இங்கிலாந்தின் வடபகுதியிலும் விளயாடப்படுகிறது.
- டக்பின் பௌலிங் (Duckpin bowling) : அமெரிக்காவில், மத்திய அத்லாந்திக் மற்றும் டெற்கு நியூ இங்கிலாந்துப் பகுதிகளிலும், கிழக்குக் கனடாவிலும் காணப்படும் பௌலிங் வகை இது. இதிலே சிறிய தடித்த பின்களைப் பயன்படுத்துகிறார்கள்.