மசூதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மசூதி என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி அல்லது பள்ளிவாயில் என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். மசூதிகள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய மசூதிகள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது மசூதிகள் வரை உள்ளன.
முஸ்லிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே மசூதிகளின் முக்கிய பயன்பாடாகும். இஸ்லாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக மசூதிகள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் மசூதிகள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற மசூதிகள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.