முத்துசுவாமி தீட்சிதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முத்துசுவாமி தீட்சிதர் (மார்ச் 24, 1776 - அக்டோபர் 21, 1835) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருஷம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.
வைத்தீஸ்வரன்கோயில் முத்துகுமாரஸ்வாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் "முத்துசுவாமி" எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராம ஸ்வாமி தீட்சிதருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர்.
முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே விவாகம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரே பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது.
தீட்சிதருக்கும் அவரின் தந்தைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் வேதம், மந்திரம், முதலான சாத்திரங்களில் வல்லவர்கள். இனிமையாக பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் திறமையானவகள். சிறந்த சாகித்திய கர்த்தாக்கள். சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்றவர்கள். தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார்.
[தொகு] இசைப் புலமை
தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி சங்கீத்தத்திலும் தேர்ச்சி பெற்றார். இவரின் குரு மிக்க மகிழ்ந்து "அன்பா இனி தமிழகம் செல். திருத்தணி முருகனை உபாசி. முருகன் அருள் பெற்று நாத வித்தையைப் பரவச் செய்" என நல் வாக்களித்தார். சில நாட்களில் இறைவன் அடி சேர்ந்த தம் குருவின் உடலுக்கு ஹனுமான் கட்டடத்தில் சமாதி கட்டி வைத்து, வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டு தீட்சிதர் மணலிக்குத் திரும்பினார்.
மணலிக்குத் திரும்பிய தீட்சிதர், பின் குருவின் சொற்படி திருத்தணி சென்றார். சுப்பிரமணியக் கடவுளைத் தரிசிக்க மலை ஏறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்து " முத்துஸ்வாமி வாயைத் திற" என்று சொல்லி ஒரு கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்து மறைந்து விட்டார். அப்போதே மயில் மேல் ஏறிச் செல்லும் முருகனைத் தரிசித்து பரவசமுற்ற தீட்சிதர், சுப்பிரமணிய சுவாமியின் அருளால் கானவாக்கு உதித்து நாத உருப்படிகளை இயற்றும் திறனையும் பெற்றார். இவருடைய முதல் கிருதி மாயாமாளவகௌளையில் "சிறீ நாதாதி குருகுஹோ ஜயதி" என்பதாகும். தன்னுடைய பாடல்களில் குருகுஹ என்ற முத்திரையைக் கையாண்டார். இவரது கிருதிகள் நாளிகேர ரஸத்திற்கு ஒப்பானவை.
[தொகு] இசைப்பணி
பிறகு திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காமாட்சியையும், ஏகாம்பரையும் பாடி விட்டு சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கும் பயணம் செய்து பின்னர் திருவாரூருக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களின் பெயரிலும் பல உருப்படிகளை இயற்றினார்.
தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.
பின்னர் சுவாமிமலை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களுக்கும் சென்று கிருதிகள் இயற்றினார். பின் திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதேஸ்வரரின் பேரில் ஜமுனா கல்யாணியில் "ஜம்பூபதே" (பஞ்சலிங்க கிருதி) என்ற கிருதியையும், சிறீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் பேரிலும் கிருதிகள் இயற்றியுள்ளார். இவர் பல தொகுதிக் கீர்த்தனைகளையும் இயற்றினார்.
- பஞ்சலிங்க ஸ்தலக கிருதி - 5 கிருதிகள்
- கமலாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
- அபயாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
- சிவ நவா வர்ணம் - 9 கிருதிகள்
- நவக்கிரகக் கிருதி - 9 கிருதிகள்
தீட்சிதர் கிருதிகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்கள் கொண்டவை. மற்றொன்று பல்லவி, அனுபல்லவி மட்டும் கொண்டவை. சரணம் உள்ள கிருதிகளில் ஒரு சரணத்திற்கு மேல் இல்லை. இவருடைய கிருதிகளில் காணபடும் மற்றொரு சிறப்பம்சம் மத்திமகால சாகித்தியம் ஆகும். அநேகமாக எல்லாக் கிருதிகளிலும் இது காணப்படுகின்றது. சில கிருதிகளுக்கு சிட்டைஸ்வரம், சொற்கட்டுஸ்வரம் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.
தீட்சிதரின் பெரும்பாலான கிருதிகள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும் சில கிருதிகள் மணிப்பிரவாளத்திலும் உள்ளன. ப்ராஸம், அனுப்பிராஸம் இவைகளோடு யாகம், கோபுச்சம், சுரோதோவாகம், ஸ்வர அட்சரம் ஆகிய அலங்காரங்களையும் 35 தாள முறைகளையும் இவர் கையாண்டுள்ளார்.
தீட்சிதரின் கிருதிகள், இசையில் ஆரம்பப் பயிற்சி பெறும் மாணவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற வித்துவான்களும் சபையில் பாடும் வகையிலும் அமைந்துள்ளன.
[தொகு] சீடர்கள்
- சுத்த மங்களம் தம்பியப்பா
- சின்னையா
- பொன்னையா
- சிவானந்தம்
- வடிவேலு
- திருக்கடையூர் பாரதி
[தொகு] இறுதிக்காலம்
குகன் திருவருளால் அழியப்புகழ் பெற்றுள்ள தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சிஷ்யர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த "மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியைப் பாட பாடக் கேட்டுக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து இரு கைகளையும் தலை மேல் குவித்து சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. தற்சமயம் இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.
[தொகு] தீட்சிதரின் கீர்த்தனைகள்
முத்துசுவாமி தீட்சிதரின் கிருதிகள் யாவும் சமஸ்கிருத மொழியிலேயே அமைந்துள்ளன. கிருதிகள் பலவற்றுள் இராகத்தின் பெயர் புகுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். இவருடைய தொகுதிக் கீர்த்தனைகள் வருமாறு:
- கமலாம்பா நவாவர்ணம் (9 கிருதிகள்)
- அபயாம்பா நவாவர்ணம் (9 கிருதிகள்)
- சிவ நவா வர்ணம் (9 கிருதிகள்)
- பஞ்சலிங்கஸ்தல கிருதிகள் (5 கிருதிகள்)
- நவகிரக கிருதிகள் (9 கிருதிகள்)