வடக்கிருத்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. இவ்வழக்கமே வடக்கிருத்தல் எனப்படுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] பின்னணி
பழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என்று கருதப்பட்டது. முதுகிலே புண்படுவது புறமுதுகிட்டதன் விளைவாக இருக்கலாம் என்பதனால் போலும் இவ்வாறு கருதப்பட்டது.
[தொகு] இலக்கியத்தில் வடக்கிருத்தல்
சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது[1]. அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.
[தொகு] உசாத்துணை நூல்கள்
- கனகசபை வி., மொழிபெயர்ப்பு: அப்பாத்துரையார் கா., ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வசந்தா பதிப்பகம், சென்னை, 2001.
- புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரையுடன், பாரி நிலையம், சென்னை, 2004 (மறுபதிப்பு).
[தொகு] குறிப்புகள்
- ↑ புறநானூற்றுப் பாடல்கள் 65, 66