வளைவு (கட்டிடக்கலை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கட்டிடக்கலையில் வளைவு என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஒரு அமைப்பு ஆகும். இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஒரு அமைப்பு முறைமை ஆகும்.
[தொகு] வளைவு அமைப்புமுறையின் வளர்ச்சி
இந்த முறைமை புழக்கத்துக்கு வருமுன்னர் இரண்டு தூண்களுக்கிடையில் அல்லது சுவரிலுள்ள துவாரங்களுக்கு மேல் சுமைகளைத் தாங்குவதற்காக உத்தரங்களைப் (beams) பயன்படுத்தினார்கள். பின்னர் குறிப்பிட்ட முறையில், அக்காலத்தில் உத்தரங்களுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருந்த மரம், கற்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி, உத்தரத்தைத் தாங்கும் இரண்டு தூண்கள் அல்லது வேறுவகையான தாங்கும் புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தைக் குறிப்பிட்ட அளவுக்குமேல் அதிகரிக்க முடியாதிருந்தது. இதற்குக் காரணம், இரண்டு தூண்களிடையே தாங்கப்படும் உத்தரம், அதன் சொந்த நிறையினாலும், அதன்மீது சுமத்தப்படும் வேறு சுமைகளினாலும் கீழ்நோக்கி வளைய முற்படுகின்றது. இதனால் உத்தரத்தின் கீழ்ப்பகுதியில் வெடிப்புக்கள் உருவாகி அது உடைந்துவிடுகிறது. இதனால் தூண்களிடையேயான தூரத்தை அதிகரிக்கும்போது அதற்கேற்றவாறு கூடிய பருமனுள்ள உத்திரங்கள் தேவைப்படுகின்றன. இதற்குரிய பெரிய அளவிலான மரம், கல் முதலியனவும் கிடைத்தற்கு அரியதாகிவிடுகின்றன. இத்தகைய குறைபாடுகளே வளைவு அமைப்புமுறை விருத்தி செய்யப்படுவதற்குக் காரணமாகியது எனலாம்.
வளைவுகளின் கட்டுமானத்தில் அளவில் சிறிய செங்கற்கள், அல்லது வேறுவகைக் கற்களே பயன்படுகின்றன. அத்துடன் இதன் வளைந்த வடிவம் காரணமாக அதை உருவாக்கிய கற்கள் ஒன்றுடனொன்று அழுத்திக்கொண்டு இருப்பதால் அதில் வெடிப்பு உண்டாகாது. மேற்குறிப்பிட்ட கட்டிடப்பொருட்கள் அதிக அழுத்தத்தைத் தாங்கக் கூடியவையாக இருந்ததால் வளைவுக் கட்டுமான முறைமை ஒரு சிறந்தமுறையாகக் கருதப்பட்டது.
வளைவுகளைக் கட்டும் முறைபற்றிப் பண்டைக்கால பபிலோனியர், எகிப்தியர், அசிரியர் போன்றோர் அறிந்திருந்தார்கள். எனினும் அவர்கள் இந்த நுட்பத்தை நிலத்தடி வடிகால்கள் போன்ற முக்கியமில்லாத கட்டுமானங்களிலேயே பயன்படுத்தினர். இந்த முறைமையைச் செம்மைப்படுத்தி சிறப்புக்குரிய கட்டிடக்கலைக் கூறு ஆக்கிய பெருமை உரோமரையே சாரும். இவர்களுக்குப் பின்னர் வளைவுகளின் வடிவங்களில் பல்வேறு வகைகள் விருத்தியாகின.
[தொகு] வளைவின் வகைகள்
வளைவுகள் அவற்றின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பல வகைகளாக உள்ளன. அவற்றுட் சில கீழே காட்டப்பட்டுள்ளன.