வில்லை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வில்லை என்பது ஒளிக் கதிர்களைக் குறிப்பிட்டவாறு குவியவோ விரியவோ செய்யவல்ல ஒரு எளிய கருவி. இது ஒரு பொருளை பெரிதாகவோ சிறிதாகவோ காட்ட வல்ல, கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் ஒரு பொருளால் செய்யப்பட்டது. வில்லையின் அடிப்படைப் பண்பானது ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து வேறு ஓர் ஊடகத்தின் வழியே செல்லும் பொழுது ஏற்படும் ஒளிவிலகல் பண்பைப் பொருத்து அமைகின்றது. இதன் அடிப்படையிலேயே வெவ்வேறு வளைவுள்ள வில்லையின் பரப்புகள் அமைக்கப்படுகின்றன. ஒரு வில்லையின் புறப் பரப்புகள் சீரான குழியாகவோ, குவிந்தோ அல்லது சமதளமாகவோ இருக்கும். உப்பிப் புடைத்து இருந்தால் குவிப் பரப்பு என்றும், உள்நோக்கி வளைந்து குழிந்து இருந்தால் குழிப் பரப்பு என்றும், நேரான சமதளமாக இருந்தால் சமதளப் பரப்பு என்றும் குறிக்கப்படும். ஒருபுறம் ஒளி நுழைந்து மறுபுறம் ஒளி வெளி வருமாகையால் வில்லைக்கு இரு பரப்புகளும் முக்கியமானவை.
வில்லை என்பது பெரும்பாலும் திண்மப் பொருட்களால் ஆனது என்றாலும், தாமரை இலையின் மீது உள்ள நீரும், பனித்துளியும் திரண்டு புறப் பரப்பு குவிந்து இருப்பதால் அவைகளும் வில்லையின் பணியையே செய்கின்றது. மெல்லிய அட்டை போன்ற ஒரு தட்டையான ஒளியூடுருவு பொருளும் குறிப்பிட்ட சில வழிகளில் கீறப்பட்டோ வடிவமைக்கப்பட்டோ இருந்தால் அவைகளும் வில்லை போல இயங்க வல்லன (பார்க்க ஃவிரெனெல் வில்லை). ஒளிப்படக்கருவி, நுண்நோக்கி போன்ற பல அன்றாடக் கருவிகளிலும் அறிவியல் ஆய்வுக் கருவிகளிலும் வில்லை பரவலாக பயன்படுகின்றது.
[தொகு] வில்லைகளின் வகைகள்
பொதுவாக வில்லையின் புறப்பரப்பின் வளைவானது குவிந்து இருந்தாலும் குழிந்து இருந்தாலும் உருண்டை உருவின் புறப் பரப்பை ஒத்து இருக்கும். வில்லையின் இரு பரப்புகளும் எவ்வகையானது என்பதைப் பொருத்து, ஒளிக்கதிர்களை அது திசைதிருப்பும் பண்பு அமையும். இருகுவி வில்லை என்பது இருபரப்பும் புடைத்திருக்கும் (குவிந்திருக்கும்) வில்லை ஆகும். அதே போல இரு பரப்பும் குழிந்து இருந்தால் இருகுழி வில்லை எனப்படும். ஒரு பரப்பு, குவிந்தும் ஒரு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குவிசமதள வில்லை எனப்படும். ஒரு பரப்பு குழிந்தும் மறு பரப்பு சமதளமாகவும் இருந்தால் குழிசமதள வில்லை எனப்படும். ஒருபரப்பு குவிந்தும், மறுபரப்பு குழிந்தும் இருந்தால் குவிகுழி வில்லை எனப்படும். ஒரு குவிகுழி வில்லையின் வளைவுகள் ஒரே அளவான உருண்டைப் பரப்பாக இருக்குமானால் அதனை இணை குவிகுழி வில்லை என்பர். இவ்வகைகளைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம்.