அருங்காட்சியகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அருங்காட்சியகம் என்பது, மக்கள் மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, கல்வி, ஆய்வு போன்ற நோக்கங்களுக்காகச் சேகரித்தும், பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்ற நிறுவனமாகும். இது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாகும்.
[தொகு] மேலோட்டம்
அருங்காட்சியகங்கள், அறிவியல், கலை, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்துப் பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இக் கண்காட்சிகள், நிலையானவையாகவோ அல்லது தறகாலிகமானவையாகவோ இருக்கலாம். பெரிய அருங்காட்சியகங்கள், உலகின் பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன.
பல அருங்காட்சியகங்கள், சிறுவர்கள், பெரியவர்கள், குடும்பங்கள், குறிப்பிட்ட தொழில்துறைகளைச் சேந்தவர்கள் எனப் பல வகைப்பட்ட பார்வையாளர்களுக்காக நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் ஒழுங்கு செய்கின்றன. பொது மக்களுக்கான நிகழ்ச்சிகள், அருங்காட்சியகத்தைச் சேர்ந்தவர்களாலோ அல்லது துறைசார் நிபுணர்களாலும் நிகழ்த்தப்படும் விரிவுரைகளாகவோ, திரைப்படங்களாகவோ, கலைநிகழ்ச்சிகளாகவோ, தொழில்நுட்ப விளக்கங்களாகவோ இருக்கலாம். பல அருங்காட்சியகங்கள் அவை அமைந்துள்ள பகுதிகளின் பண்பாடுகளின் மீது குறிப்பான கவனம் செலுத்துகின்றன. பெரும்பாலான அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருட்களைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பதில்லை எனினும் சில அருங்காட்சியகங்களில் சில பொருட்களைத் தொட்டுத் தொடர்பாடுதல் ஊக்குவிக்கப்படுகின்றது.