கீத கோவிந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கீத கோவிந்தம் (சமஸ்கிருதம்: गीत गोविन्द) ("கோபியர் பாடல்") பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும். இதனை கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.
இதன் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு அஷ்டபதி என்றும் பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, பரத நாட்டியம் மற்றும் இசைக் கச்சேரிகளில் இன்றளவும் மிகவும் பிரபலம்.
1792 இல், சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் முதல்முதலில் இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
[தொகு] இலட்சணம்
- ராதை, கிருஷ்ணன், சகி ஆகிய மூவரே இக்காவியத்தின் கதாபாத்திரங்கள்.
- பல விருத்தங்களால் அமைந்து சுலோகங்களால் இக்காவியம் ஆரம்பிக்கின்றது.
- பல இராகங்களிலும், தாளங்களிலும் வெகு அழகாய் இயற்றப்பட்டுச் சொற்சுவை, பொருட்சுவை ததும்பும் 24 கீர்த்தனைகளே இக்காவியத்தின் முக்கிய பாகமாகும். அழகான சுலோகங்கள் நடுவிலும், முடிவிலும் காணப்படுகின்றன.
- ஒவ்வொரு கீர்த்தனத்திலும் 8 சரணங்கள் உள்ளன. (இதனால் இது இருப்பதால் அஷ்டபதி எனப் பெயர் பெற்றது).
- கருணை, வீரம், சாந்தி முதலிய ஒன்பது ரசங்களில் மனோகரமான, மனதுக்கு இரம்மியமான சிருங்கார ரசத்தையே பிரதானமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது வெளிப்பொருளாக சிற்றின்பமே வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பொருளை நோக்கின் கிருஷ்ணனை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாவாகவும், சகியை ஞான குருவாகவும் கொண்டு, ஜீவாத்மாவானது பரமாத்மாவை அடைய முயலும் நிலையை விளக்கிக் காட்டுவது தெரிகின்றது.
[தொகு] அஷ்டபதியின் தனிப்பெருமை
இந்திய சங்கீத சாஸ்திர நூல்களில் காலத்தால் முந்தியதென்று வழங்கும் சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரத்துக்கும் ஏறக்குறைய 200 வருடங்கள்க்கு முந்திய சங்கீத முறையை அஷ்டபதி விளக்குகின்றது. எனவே தென்னிந்தியாவும், வட இந்தியாவும் அடங்கியுள்ள பாரத நாட்டின் வெகு புராதன இசைநூல் இதுவாகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
இங்கே ஆங்கில மொழியாக்கமும், அதன் விரிவுரையும் மின்னூல் வடிவில் கிடைக்கிறது