கே. எஸ். பாலச்சந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. எஸ். பாலச்சந்திரன் (பிறப்பு - கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர். புலம் பெயர்ந்து தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] வானொலி நடிகர்
இலங்கை வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுளாக தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
[தொகு] தொலைக்காட்சி நடிகர்
இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
[தொகு] மேடை நடிகர்
1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர்.
[தொகு] திரைப்பட நடிகர்
இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
[தொகு] எழுத்தாளர்
[தொகு] வானொலி நாடகங்கள்
இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.
[தொகு] தொலைக்காட்சியில்
இலங்கையில் ரூபவாஹினிக்காகவும், கனடாவில் TVI க்காகவும் இவர் எழுதிய பல தொலைக்காட்சி நாடகங்களில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இருந்து TVI, TTN நிலையங்கள் ஒளிபரப்பும் 'Wonderful Y.T.Lingam Show' இவரது படைப்பே.
[தொகு] மேடை நாடக்ங்கள்
கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.
[தொகு] சிறுகதைகள்,கட்டுரைகள்
தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் 'மலர் மணாளன்' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் 'சிரிகதை'களை எழுதியுள்ளார். திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் 'ஒரு பேப்பர்' என்ற பத்திரிகையில் 'கடந்தது..நடந்தது' எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார்.
[தொகு] திரைப்பட இயக்குனர்
இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டார்
[தொகு] நேர்முக வர்ணனையாளர்
1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர்.
[தொகு] தனி நடிப்பு
1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய 'அண்ணை றைற்' இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
- கே. எஸ். பாலச்சந்திரனின் வலைத்தளம்
- நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன் - மடத்துவாசல் பிள்ளையாரடி, வலைப்பதிவுக் குறிப்பு.
- கே. எஸ். பாலச்சந்திரனின் வலைப்பதிவு
- அண்ணை றைற் நாடகம் - மடத்துவாசல் பிள்ளையாரடி, வலைப்பதிவுக் குறிப்பு.