திருமணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விலங்குகளிடம் காணப்படும் இனப்பெருக்கத் தேவைக்கான பாலுறவு என்னும் உயிரியற் செயற்பாடு தொடர்பான பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காகச் சமூக விலங்கான மனிதன் கண்டுபிடித்த நிறுவன அமைப்பே திருமணம் ஆகும். திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.
[தொகு] திருமண வகைகள்
திருமணங்கள் பல வகைப்படுகின்றன. அடிப்படையில் திருமணம் ஓர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே ஏற்படுகின்ற ஒரு தொடர்பைக் குறிப்பதாக இருப்பினும், அந்த ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
- ஒருதுணை மணம் (monogamy)
- பலதுணை மணம் (polygamy)
- குழு மணம் (group marriage)
ஒருதுணை மணம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வகையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதைக் குறிப்பதுடன் எந்தவொரு நேரத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டிருக்க முடியும் என்பதையும் குறிக்கும். இலக்கியங்களிலும், வரலாற்றிலும் விதிவிலக்குகள் காணப்பட்டாலும், பொதுவாக இந்துக்கள் ஒருதுணை மணத்தையே கைக்கொள்ளுகிறார்கள். உலக அளவிலும் பரவலாகக் காணப்படும் ஒரு திருமண முறையாகவும் இது உள்ளது. இந்த முறையைக் கைக்கொள்ளும் சமுதாயங்களில் ஒரு சமயத்தில் ஒருவர் ஒரு திருமணத் தொடர்பை மட்டுமே கொண்டிருக்க முடியும் என்பது சட்டமாக்கப் பட்டுள்ளது. எனினும் விவாகரத்து செய்து கொண்டாலோ, அல்லது மனைவி அல்லது கணவன் இறந்துவிட்டாலோ மீண்டும் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள முடியும்.
பலதுணை மணம் ஒருவர் ஒரே சமயத்தில் பலரைத் திருமணம் செய்து துணைவராகக் கொண்டிருப்பதைக் குறிக்கும். மணம் செய்பவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். எனவே பலதுணை மணத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- பலமனைவி மணம் (polygyny)
- பலகணவர் மணம் (polyandry)
ஓர் ஆண் ஒரே சமயத்தில் பல பெண்களை மணந்து மனைவியராக்கிக் கொண்டு வாழுதல் பலமனைவி மணமுறை ஆகும். மறுதலையாக ஒரு பெண் பல கணவர்களைத் திருமணம் செய்து வாழுதல் பலகணவர் மணம் எனப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் கூட்டாகத் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருப்பது குழு மண முறையாகும். இங்கே குழுவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் மற்ற எல்லா ஆண்களுக்கும் மனைவியாகவும், அதுபோல ஒவ்வொரு ஆணும் மற்ற எல்லாப் பெண்களுக்கும் கணவனாகவும் ஆகிறார்கள். இம்முறை இக்காலத்தில் மிகக் குறைவான அளவிலேயே பின்பற்றப் படுகின்றது. இன்று பலகணவர் மண முறையைப் பின்பற்றும் சில சமுதாயங்களில் அம்முறையில் ஒரு விரிவாக்கமாக இந்தக் குழு மண முறை இருப்பதாகக் கூறப்படுகிறது.