நேரிசை வெண்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நேரிசை வெண்பா என்பது தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும். நேரிசை வெண்பாவுக்கான இலக்கணப்படி இது பின்வரும் அமைப்பைக் கொண்டிருக்கும்.
- பொதுவான வெண்பாவுக்கு உரிய இலக்கணங்களைக் கொண்டிருத்தல்.
- நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
- இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
- நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.
[தொகு] எடுத்துக்காட்டு
நளவெண்பாவில் உள்ள பின்வரும் செய்யுள் நேரிசை வெண்பாவுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
- அஞ்சல் மடவனமே உன்ற னணிநடையும்
- வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
- காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
- மாணப் பிடித்ததார் மன்
இது நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா. இதன் இரண்டாவது அடியில் விஞ்சியது என்ற சொல் தனிச்சொல் ஆகும். முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகையையும் (அஞ்சல் - வஞ்சி), மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (காணப் - மாணப்) கொண்டு அமைந்துள்ளன. இதனால் இது ஒரு நேரிசை வெண்பா ஆகின்றது.
பின் வருவது நான்கு அடிகளிலும் ஒரே வகையான எதுகை வரும் நேரிசை வெண்பாவொன்று ஆகும்.
- நெல்லுக்கி றைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
- புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
- நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு
- எல்லோர்க்கும் பெய்யும் மழை.