யமுனா ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவிலமைந்த ஒரு கேணிஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி இது யாழ்ப்பாண அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கூழங்கை சக்கரவர்த்தியின் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலை, நல்லூர் நகரம் உருவாக்கப்பட்டது பற்றிக் கூறும்போது,
- ....நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ........
என்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த கேணியையே ஆகும். யமுனாநதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது.
ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது.