கோவலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோவலன், தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் முக்கியமான கதைமாந்தன் ஆவார். இவர் காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாசாத்துவன் என்னும் வணிகனின் மகன் ஆவார். இவர் மற்றொரு வணிகரின் மகளான கண்ணகியை மணந்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சிலகாலத்திற்குப் பின் கோவலனுக்கு மாதவி என்னும் நாட்டியக்காரியின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். ஆனால் சிறிது காலத்தில் அவன் செல்வம் அனைத்தும் கரைந்து போனது. பின்னர் மனம் திருந்திய கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வந்தான். அவர்களிடம் ஓரிணை சிலம்புகளைத் தவிர வேறேதும் இல்லை.
எனவே கோவலன் அவற்றை விற்று வணிகம் செய்து வாழலாம் என்று தனது மனைவியுடன் மதுரை நகரத்திற்குச் சென்றான். அங்கு அச்சிலம்புகளை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி கூட்டிச்சென்றனர். அரசியின் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.
இதையறிந்த கண்ணகி அரசவைக்கு வந்து தனது சிலம்பை உடைத்து தனது சிலம்பில் உள்ள பரல்களும் அரசியின் சிலம்பில் உள்ள பரல்களும் வெவ்வேறு என்பதை காட்டி மன்னன் தவறு செய்ததை சுட்டிக்காட்டினாள். தான் தவறாகத் தீர்ப்பளித்ததை உணர்ந்து வேதனையடைந்த பாண்டிய அரசன், அவ்விடத்திலேயே உயிர் துறந்தான்.
எனினும் கோபம் தணியாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரையே எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் |
---|
கதைமாந்தர் |
கண்ணகி | கோவலன் | மாதவி | நெடுஞ்செழியன் | மணிமேகலை | மாசாத்துவன் | வசவதத்தை | கோசிகன் |
மாதலன் | கவுந்தி அடிகள் | கோப்பெருந்தேவி |
மற்றவை |
புகார் | மதுரை | வஞ்சி |