மாதவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாதவி, தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நாட்டியமாடி வந்தார்.
[தொகு] கதை
கரிகால சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது கோவலன் எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. அவளிடம் காதல் கொண்ட கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற மகள் பிறந்தாள். சிறிது காலத்தில் கோவலனின் செல்வம் அனைத்தும் கரைந்து போன பின், மனம் திருந்திய அவன் மீண்டும் கண்ணகியிடம் சென்றான்.
செல்வம் ஏதும் இல்லாததால், கண்ணகியின் சிலம்புகளை விற்று வணிகம் செய்து வாழலாம் என்றெண்ணி கோவலன் தனது மனைவியுடன் மதுரை நகரத்திற்குச் சென்றான். அங்கு அச்சிலம்புகளை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி கூட்டிச்சென்றனர். அரசியின் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.
எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலை செய்யப்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசனிடம் கண்ணகி வாதித்து நிரூபித்தாள். தன் பிழைகண்டு வேதனையடைந்த பாண்டிய மன்னனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்தாள்.
கோவலன் மற்றும் கண்ணகியின் மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப்பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் |
---|
கதைமாந்தர் |
கண்ணகி | கோவலன் | மாதவி | நெடுஞ்செழியன் | மணிமேகலை | மாசாத்துவன் | வசவதத்தை | கோசிகன் |
மாதலன் | கவுந்தி அடிகள் | கோப்பெருந்தேவி |
மற்றவை |
புகார் | மதுரை | வஞ்சி |