ஜோர்ஜெஸ் பிராக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque, மே 13, 1882 – ஆகஸ்ட் 31, 1963) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியரும், சிற்பியும் ஆவார். கியூபிசம் எனப்படும் ஓவியப் பாணியை உருவாக்கியோராகக் கருதப்படுபவர்களுள் இவரும் ஒருவர். மற்றவர் பாப்லோ பிக்காசோ.
ஜோர்ஜெஸ் பிராக், பிரான்ஸ் நாட்டிலுள்ள Argenteuil-sur-Seine என்னுமிடத்தில் பிறந்தார். வளர்ந்தது லெ காவ்ரே (Le Havre) என்னுமிடத்தில். 1897 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux-Arts) என்னும் கலைக் கல்வி நிறுவனத்தில் மாலை நேரங்களில் பயின்றுவந்தார். 1901 ஆம் ஆண்டு கைப்பணித் துறையில் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடம் ஹம்பேர்ட் அக்கடமியில் சேர்ந்து 1904 ஆம் ஆண்டுவரை இருந்தார். அங்கேதான் மாரீ லோரென்சின் (Marie Laurencin) மற்றும் பிரான்சிஸ் பிக்காபியா (Francis Picabia) ஆகியோரைச் சந்தித்தார்.
இவருடைய ஆரம்பகால ஆக்கங்கள் உணர்வுப்பதிவுவாத (impressionism) ஓவியப் பாணியைச் சேர்ந்தவை. பின்னர் இவரது ஓவியங்கள் போவிஸ்ட் (Fauvist) பாணியில் அமைந்திருந்தன. இப்பாணியிலமைந்த இவரது ஆக்கங்கள் ஆண்டுக்கொருமுறை நிகழ்ந்து வந்த "சலோன் டெஸ் இண்டிபெண்டண்ட்ஸ்" (Salon des Indépendants) என்னும் சுதந்திரக் கலைஞர்களின் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 1909 ஆம் ஆண்டிற்கும், 1911 ஆம் ஆண்டிற்கும் இடையில் பிக்காசோவுடன் சேர்ந்து கியூபிசம் என்று அழைக்கப்பட்ட ஓவியப் பாணியை விருத்தி செய்வதில் ஈடுபட்டிருந்தார்.