தமிழ் புளூட்டாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் புளூட்டாக் (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும். இது இலங்கை, கற்பிட்டியைச் சேர்ந்த சைமன் காசிச்செட்டி(1807 - 1860) என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, ரிப்ளே அண்ட் ஸ்ட்ரோங் (Ripley & Strong) பதிப்பகத்தாரால் யாழ்ப்பாணத்தில் 1859 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கருதப்படுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] பெயர்
பண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞரான புளூட்டாக் என்பவர் தனது காலத்தில் வாழ்ந்த புலவர்களில் நாற்பத்தாறு பேரின் வரலாற்றை எழுதினார். புகழ் பெற்ற இந்த நூல் எழுதியவரின் பெயரால் "புளூட்டாக்" என வழங்கப்பட்டது. இதைப் பின்பற்றியே காசிச்செட்டி அவர்கள் தான் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாற்றுக்குத் தமிழ் புளூட்டாக் எனப் பெயரிட்டார்.
[தொகு] உள்ளடக்கம்
இந் நூலில் 195 தலைப்புகளின் கீழ் புலவர்களுடைய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், வேறு ஐந்து புலவர்கள் பற்றிய விபரங்கள் தனித் தலைப்புகளிலன்றிப் பிற புலவர்களைப் பற்றிக் கூறும்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதங்கோட்டாசிரியர், சேனாவரையர், இளம்பூரணர், குணசாகரர், அம்பிகாபதி ஆகிய மேற்படி ஐவரில் முதல் மூவர் தொல்காப்பியரின் கீழும், நாலாமவர் அமிர்தசாகரரின் கீழும், அம்பிகாபதி அவர் தந்தையாரான கம்பரின் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தவிர பெருந்தேவனார் என்னும் தலைப்பில் இரு வேறு பெருந்தேவனார்களைப் பற்றிய விபரங்கள் கொடுபட்டுள்ளன. இதன்படி இந்நூல் 202 தமிழ்ப் புலவர்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
[தொகு] பதிப்புக்கள்
இந்நூல் முதன் முதலாக 1859 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டபின்னர், 1946 ல் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், விபுலானந்த அடிகள் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடி இதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. அண்மையில் "ஆசிய கல்விச் சேவை" (Asian Educational Services) நிறுவனத்தினர் இதனை மறுபதிப்புச் செய்துள்ளனர்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- பாவலர் சரித்திர தீபகம்
- சைமன் காசிச்செட்டி
- சங்கப் புலவர்கள் பட்டியல்