சைமன் காசிச்செட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சைமன் காசிச்செட்டி அவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கைச் சட்டசபைக்கும் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவைதவிர தான் எழுதிய நூல்கள் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] பின்னணி
இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டி என்னும் ஓர் ஊர் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புத்தளம் நகரமாக வளர்ச்சி பெறுமுன், கற்பிட்டி வணிகத்தில் முன்னணியிலிருந்த ஒரு துறையாக விளங்கியது. இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர். காலப் போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இன்று இலங்கையில் வாழும் கொழும்புச் செட்டிமார் தமிழ் அறியாதவர்களாகவே உள்ளனர்.
[தொகு] இளமைக் காலம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் சைமன் காசிச்செட்டி அவர்கள் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், இலங்கையின் பெரும்பான்மையினர் மொழியான சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, லத்தீன், கிரேக்கம், எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.
[தொகு] இவர் வகித்த பதவிகள்
இவருக்கு 21 வயதானபோது மணியகாரர் என்னும் பதவிக்கு நியமனமானார். பின்னர் மாவட்ட முதலியார் பதவிக்கு உயர்வு பெற்றார். 1838 ல், கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுப்புரிமை வெற்றிடமானபோது, சைமன் காசிச்செட்டி இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். சில ஆண்டுகளின் பின்னர் இவர் பொலீஸ் நீதிபதியாக நியமனம் பெற்றுப் பின்னர் மாவட்ட நீதிபதியானார்.
[தொகு] ஆற்றிய பணிகளும், சாதனைகளும்
தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன.
இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கஜற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் கூடப் புகழ் பெற்றார். இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார்.
இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "தமிழ் புளூட்டாக்" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.