திருவள்ளுவர் சிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருக்குறள், மனிதகுலம் என்றென்றம் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும். ஆத்தகைய நெறிகளை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழ, திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] திருவள்ளுவர் சிலையின் அளவுகள்
சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரமோ 95 அடி பிரமாண்டம்! மொத்தத்தில் 133 அடி உயர சிலை வடிவம் கண்கவர் வண்ணம்!!
பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் பொலிவுடன் அமைகிறது. இவ்வாறு சுற்றுச்சுவர் கொண்ட பீடமும் சிலையும் அணிமணி மண்டபமாய் அமைந்தெழுந்து, ஆழிசூழ் தென்முனையில் அழகார்ந்த ஓவியமாய் மிளிர்கிறது.
[தொகு] சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம்
பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது. ஆம். அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
[தொகு] சிலைக்கான கற்களை ஈந்த மலைகள்
சிறுதாமூர், பட்டுமலைக்குப்பம் மலைகள், அம்பாசமுத்திரம் மலைகள்.
[தொகு] சிலை பற்றிய முக்கிய விவரங்கள்
- சிலையின் உயரம் - 95 அடி
- பீடத்தின் உயரம் - 38 அடி
- சிலையும் பீடமும் சேர்ந்து - 133 அடி
- முகத்தின் உயரம் - 10 அடி
- உடல் பகுதியின் உயரம் - 30 அடி
- தொடைப் பகுதியின் உயரம் - 30 அடி
- கால் பகுதியின் உயரம் - 20 அடி
- உச்சந்தலை, கழுத்து, முட்டி மற்றும் பாதமும் சேர்ந்து - 10 அடி
- கைத்தவம் - 10 அடி
- சுவடியின் நீளம் - 10 அடி
- தோள்பட்டையின் அகலம் - 30 அடி
- சிகைப் பகுதி - 5 அடி
- ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுசுவர் - 60அடி * 50அடி
- ஓவ்வொன்றும், ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் கொண்ட 10 யானைகள்.
- ஆதார பீடம், சிலை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவற்றின் மொத்த எடை 7000 டன்.