நீளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீளம் என்பது தூரம் என்ற கருத்துருவோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல். ஒரு பொருளைக் கருத்தில் கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய ஒரு வகையான தூரத்தைக் குறிப்பது. அதாவது, நிலைக்குத்துத் திசையில் ஒரு பொருள் தொடர்பில் அமையும் தூரம் உயரம் எனப்படுகின்றது. கிடைத் திசையில் அப்பொருளில் அதிகூடிய தூரத்திலுள்ள இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம் நீளம் என்றும், அதற்குக் குறுக்காக அமையும் தூரம் அகலம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு தூரத்தின் ஒரு வகையே நீளம் எனப்பட்டாலும், எல்லாவகைத் தூரத்தையும் அளக்கும் அலகு (unit) நீள அலகு என்றே குறிக்கப்படுகின்றது. எனவே நீளம் என்பது தூரத்தின் அலகையும் குறிக்கப் பயன்படுகின்றது. இன்றைய அறிவியல் துறைகளில் கணிய அளவீடுகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை அலகுகளுள் இதுவும் ஒன்று. மற்றவை திணிவும், நேரமும் ஆகும்.
[தொகு] நீள அலகுகள்
நீள அளவு பற்றிய கருத்துரு மனித சமுதாயத்தில் அறிமுகமான பின்னர் பல்வேறு வகையான நீள அளவை முறைமைகள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வகையான நீள அளவை முறைமைகள் வழக்கில் உள்ளன. பழைய காலத்தில் கீழைநாடுகளிலும், மேல்நாடுகளிலும், மனித உறுப்புக்களின் நீளங்களை அடிப்படையாகக் கொண்டே நீள அலகுகள் உருவாயின. இந்தியாவில் வழக்கிலிருந்த முழம், சாண், விரற்கடை போன்ற அலகுகளும், மேல் நாடுகளில் புழங்கிய அடி, யார் போன்ற அலகுகளும். இத்தகையனவே. இவற்றைவிட சிறிய நீளங்களை அளப்பதற்குத் தானியங்களின் நீளங்கள் அடிப்படையாக அமைந்ததையும் எள்ளு, நெல்லு, தினை போன்ற இந்தியாவின் பண்டைக்கால அளவுமுறைகள் காட்டுகின்றன.