மக்கள் விடுதலை முன்னணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மக்கள் விடுதலை முன்னணி (People's Liberation Front, Janatha Vimukthi Peramuna) இலங்கையின் அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். சுருக்கமாக JVP என அழைக்கப்படுகிறது. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாகக் கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது.
பொருளடக்கம் |
[தொகு] ஜேவிபியின் தோற்றம்
இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர (Rohana Wijeweera) 1965 மே 14 அன்று இக் கட்சியை நிறுவினார். சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாகக் கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட படித்த வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்சாதியினர் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.
[தொகு] 1971ம் ஆண்டு கிளர்ச்சி
1971 மார்சசில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் சீறிமாவோ பண்டாரநாயக்க அரசிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண வீஜயவீர உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ஏப்ரல் 5ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த இந்தியா, சீனா நாடுகளின் உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது.
[தொகு] 1977-1983 காலகட்டம்
1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கியது. ஜே.வி.பி. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் பங்குபற்றினர். 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக ரோகண வீஜயவீர போட்டியிட்டு 275,000 வாக்குகளைப் பெற்றார்.
[தொகு] 1983 ஜூலைக்கலவரம்
கொழும்பில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக் கலவரத்திற்கு ஜேவிபியினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜேவிபினர் தலைமறைவாக இயங்கத்தொடங்கினர்.
[தொகு] 1987-1989 ம் ஆண்டு கிளர்ச்சி
[தொகு] 1990ன் பின்னர்
ஜே.வி.பி. கட்சியானது புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது.
2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றனர். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர்.
ஜே.வி.பி. தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினைப் பின்பற்றி வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழ் தேசியக்கூட்டமைப்பு, நோர்வே அரசு என்பவற்றிக்கெதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது.