இலங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு |
|
குறிக்கோள்: இல்லை | |
நாட்டு வணக்கம்: சிறி லங்கா தாயே | |
தலைநகரம் | சிறி சயவர்த்தனபுரம் |
பெரிய நகரம் | கொழும்பு |
ஆட்சி மொழி(கள்) | சிங்களம், தமிழ் |
அரசு | சனநாயக சோசலிசக் குடியரசு |
- சனாதிபதி | மகிந்த ராஜபக்சா |
- பிரதமர் | இரத்னசிறி விக்கிரமநாயக்கா |
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடமிருந்து |
- பெற்றது | பிப்ரவரி 4, 1948 |
பரப்பளவு | |
- மொத்தம் | 65,610 கி.மீ.² (122வது) |
25,332 சதுர மைல் | |
- நீர் (%) | 4.4% |
மக்கள்தொகை | |
- 2005 மதிப்பீடு | 20,743,000 (52வது) |
- 2001 கணிப்பீடு | 18,732,255 |
- அடர்த்தி | 316/கிமி² (35வது) 818/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | 86.72 பில்லியன் (61வது) |
- ஆள்வீதம் | $4300 (111வது) |
ம.வ.சு (2003) | 0.751 (93வது) – மத்திம |
நாணயம் | இலங்கை ரூபாய் (LKR ) |
நேர வலயம் | (ஒ.ச.நே.+5:30) |
இணைய குறி | .lk |
தொலைபேசி | +94 |
மின்சாரம் | |
- மின்னழுத்தம் | 230 V |
- அலையெண் | 50 Hz |
|
இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு (சிங்களம்: ශ්රී ලංකා, ஆங்கிலம்: Sri Lanka, 1972க்கு முன் சிலோன்) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவு தேசம் ஆகும்.
முற்காலத்தில் இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்) உற்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாகப் அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்த படுகிறது). அதன் அமைவின் காரணமாக இந்து சமுத்திரத்தின் நித்திலம் என்ற புகழும் இதற்கு உண்டு.
அமைதியான நாடாக இருந்துவந்த இந்நாடு, கடந்த ஐந்து தசாப்தங்களாக இன முரண்பாடுகளுக்குள் சிக்கித் திணறிக் கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக அரசாங்கத்துக்கும், தொடக்கத்தில் பல தமிழ் போராளிக் குழுக்களுக்கும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. நோர்வேயின் அனுசரணையோடு 2002 இன் முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கைகைச்சாத்தானது. இது அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போதும் தற்போது மீண்டும் நாட்டின் அரசியல் உறுதிப்பாடும் போர் நிறுத்த உடன்படிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் வரலாறு
[தொகு] புராதன காலம்
இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கி.மு 6ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
தொடக்கத்தில் இந்துக்களாக இருந்த இவர்களிடையே மகிந்த தேரரால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கி.மு. 200 இலிருந்து கி.பி. 1000 AD வரை), பொலன்னறுவை (அரசு கி.பி. 1070 இலிருந்து கி.பி. 1200 AD வரை),ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின. இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. யாழ்ப்பாண இராச்சியம் என்று வழங்கப்பட்ட இவ்வரசு ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது.
[தொகு] மத்திய காலம்
போர்த்துக்கீச கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் 1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்பு கரையை அடைந்தது. அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர். 1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597 கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீசர் வசப்பட்டது. கண்டி இராசதானியுடன் 1638 செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோர பகுதிகள் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. 1796யில் ஒல்லாந்தர் ஆங்கிலேய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிகாததால் ஆங்கிலேயர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1801ரில் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையை தத்தம் செய்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815 யில் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.
[தொகு] நவீன காலம்
ஆங்கிலேயரின் 133 வருடகாலப் ஆட்சிக்குப் பின்னர், 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த, தமிழ், சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாகச் சீர்கெடத் துவங்கின. இன முரண்பாடுகளின் வெளிப்பாடுகள், அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும், சிங்கள சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு சிங்கள அரசியல்வாதிகளும், இனப்பாகுபாடு, இன ஒழிப்பு போன்ற குற்றச்சாட்டுகளுடன் தமிழ் அரசியல் வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு காழ்ப்புணர்வுகளை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். 1958ல் ஆரம்பித்து, இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத்தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, சிங்களம் மட்டும் சட்டமும், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பும், பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும், நிலைமையை மேலும் மோசமாக்கின. 1983க்குப் பின்னர், கடந்த பல வருடங்களாக நடைபெறும் ஆயுதமேந்திய உள்நாட்டுப்போரினால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தோ, படுகாயமடைந்தோ, அகதிகளாகியோ, சொத்துக்களை இழந்தோ பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1987ஆம் ஆண்டில், இந்த உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தமொன்றின்படி இந்தியா அமைதிகாக்கும் படையொன்றை (IPKF) இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியது. முரண்பாடுகளில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளில் ஒன்றான தமிழர் தரப்பை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையில் ஏற்பட்ட போருடன், தோல்வியில் முடிந்தது. 2001 ஆம் ஆண்டில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நோர்வே முன் வந்ததையடுத்து, அந்நாட்டின் அனுசரணையுடன், போர்நிறுத்த ஒப்பந்தமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. சில காரணங்களால், பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், போர் நிறுத்தமும், சமாதான முயற்சிகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன.
[தொகு] அரசியல்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் அரசியல்
குடியரசின் சனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக, 6 வருடப் பதவிக்காலத்துக்கு மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்படுகிறார். இவர் ஒரே நேரத்தில் நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும், ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும் செயல்படுகிறார். சனாதிபதி அரசியல் யாப்பினதும், ஏனைய சட்டங்களினதும் அமைவாக, தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராவார். சனாதிபதி, பாராளுமன்றத்துக்குப் பொறுப்புள்ள அமைச்சரவை ஒன்றை நியமித்து, அதற்குத் தலைமை தாங்குவார். குடியரசுத் தலைவர் அடுத்த நிலையிலுள்ளவர் பிரதம மந்திரியாவார்.
சனாதிபதியை பதவி நீக்கம் செய்வதாயின், அதற்கு பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 2/3 பெரும்பான்மைக்கு குறையாதோர் சனாதிபதி புரிந்த குற்றங்களையுடைய குற்றப்பிரேரணை ஒன்றை கையொப்பமிட்டு நிறைவேற்றுதல் வேண்டும், இந்த குற்றப்பிரேரணை உயர் நீதிமன்றம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டு அதனால் பரிசீலணை செய்யப்பட்டு அங்கீகரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். பின்னர் உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கபட்ட குற்றப்பிரேரணை மீண்டும் பாராளுமன்றம் முன்னர் கொண்டுவரப்பட்டு, அதன் மொத்த உறுப்பினர்களில் 2/3 குறையாதோர் வாக்களித்து நிறைவேற்றுதல் வேண்டும்.
இலங்கை பாராளுமன்றம் 6 வருடங்களுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபைகொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யபடுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கபடுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.
பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடிய அதிகாரமும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும், சனாதிபதிக்கு உண்டு. சட்டங்களையும் ஆக்குகின்ற அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் சனாதிபதிக்கும் உண்டு. இலங்கை, பொதுநலவாய நாடுகளின் ( Commonwealth countries ) உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
[தொகு] நிர்வாக கட்டமைப்பு
[தொகு] நிர்வாக சேவை
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் நிர்வாக சேவை
இலங்கையின் நிர்வாக சேவை இரு சமாந்தர கட்டமைப்புகளை கொண்டது. அவையாவன அரசாங்க சேவை( குடியேற்ற காலத்திலிருந்து வரும்), மாகாண சேவைகள்( 1987லில் அமைக்கப்பட்ட மாகாண சபைகளினால் உண்டாக்கப்பட்ட) ஆகும்.
இலங்கை அரசாங்க சேவை பொது சேவை அணைக்குழுவின் கீழும், மாகாண சேவைகள் மாகாண சேவைகள் அணைக்குழுவின் கீழும் இயங்குகின்றன.
புரநாட்டு வழமைகளுக்கு மாறாக இலங்கையின் நிர்வாக சேவைகள் நேரடி அரச கட்டுப்பாட்டில் உள்ளன. இது சில அரசியல் துட்பிரயோகங்களுக்கு வழிவகுத்த போதிலும், அனேகமாக வின்விரயமற்ற, வேகமான நிர்வாக சேவையை ஏற்படுத்தியதாக கொள்ளப்படுகின்றது.
[தொகு] நிர்வாக பிரிவுகள்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் நிர்வாக பிரிவுகள்
இலங்கை ஒன்பது அரசியல் மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை இரண்டு அல்லது மேற்பட்ட நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியன. ஒவ்வொரு மாகாணமும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையால் ஆளப்படுகின்றது.
இலங்கை 25 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் நியமிக்கப்படும் அரசாங்க அதிபரால் நிர்வகிக்கப்படுகின்றது. அரசாங்க அதிபரின் கீழ் நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் தலைமையிலான 5 - 16 வரையான பிரதேச செயலாளர் பிரிவுகளாக ஒரு மாவட்டம் ரிக்கப்பட்டுள்ளது. மிக கீழ்நிலை நிர்வாக பிரிவுகளாக கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.
இலங்கையின் மாகாணங்களின் பட்டியல்:
- வடக்கு மாகாணம்
- கிழக்கு மாகாணம்
- வடமத்திய மாகாணம்
- வடமேல் மாகாணம்
- மத்திய மாகாணம்
- சபரகமுவை மாகாணம்
- ஊவா மாகாணம்
- தென் மாகாணம்
- மேல் மாகாணம்
1 இவற்றுள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்டு வடக்கு - கிழக்கு மாகாண சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.)
[தொகு] பௌதிக வளம்
[தொகு] புவியியல் வளம்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் புவியியல்
இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும், இதன் வடகிழக்கே வங்காள விரிகுடா உள்ளது. இது இந்தியத் துணக்கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது. ஸ்ரீ இராமபிரானால் கட்டப்பட்ட இராமர் அணை எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தலைநிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்து. இது 1480தாம் ஆண்டலவில் எற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறை தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.
இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கை அனேகமாக பாதிப்பதில்லை. இதன் 90% விகிதமான நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்தய பாறைதொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைதொடர்களின் நடத்திய ஆராச்சிகளின் விளைவாக இந்தியத் துணக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் பெரியதொர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது. ஆனால் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் உள்ளார்ந்த அமுக்கங்களின் காரணமாக இந்த பாரிய கண்டம் பிளவுபட தொடங்கியது. பின்னர் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது. இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
மாங்காய் வடிவிலான இத்தீவை மூன்று பெரும்நிலப்பிரிவுகளாக பிரிக்கலாம், அவையாவன கரையோர தாழ்நிலம், உட்புர சமவெளி, மத்திய மலைநாடு ஆகும். மத்திய மலைநாடானது மிகவுயரிய மலைத்தொடர்கள் வினோதமான பிரதேசமாகும். இவற்றிலே இலங்கையில் அதி உயர்ந்த மலையாகிய, 2,524 மீட்டர் உயரம் கொண்ட பீதுறுதாலகால மலையும், நான்மதத்தினரிடையும் புகழ் பெற்ற சிவனொளிபாத மலையும் அடங்கும்.இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பம்பரகந்த.இலங்கையில் ஆறுகள் இல்லாத இடம் யாழ்பாணம்.இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை
[தொகு] இலங்கை காலநிலை
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் காலநிலை
இலங்கையின் காலநிலை, டிசம்பரிலிருந்து மார்ச் வரை வீசும் வடகிழக்குப் பருவப்பெயற்சிக் காற்று, ஜூனிலிருந்து அக்டோபர் வரையிலான தென்மேல் பருவப்பெயற்சிக் காற்று என்பவற்றால் தன்மை கொடுக்கப்பட்ட (characterised) அயனமண்டல காலநிலையாகும். கொழும்பு, குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்துவருகிறது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையிலுள்ள கோட்டேயை ஆக்கும் பொருட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடம் அங்கே கட்டப்பட்டது. இலங்கையின் எனைய முக்கிய நகரங்களில் யாழ்ப்பாணம், காலி, கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு என்பவை அடங்கும்.
[தொகு] சூழலியல் வளம்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் உயிரியல் வளம்
உலகிலேயே அதிகூடிய இனச்செளுமை கொண்ட நாடு இலங்கையாகும். இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர, விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல்பிராந்தியங்களுக்கு தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்திய பருவப்பெயற்சிக்காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் இலங்கை தாழ்நிலப் மழைக்காடுகள் அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக மாற்றம் பெருகின்றன. இவ்விரு அயணமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன் நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.
இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரதொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெறுமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரன்கள் எஞ்சியுள்ள வனப்பிராந்தியங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முன்று உயிரிணமண்டல ஒதுக்கங்கள் உள்ளன.
இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாக காணப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு இந்தியத் துணைக்கண்டத்தின் பறவை உட்பிரதேச உரிமை பற்றிய கட்டுரையை பார்க.
இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை.
இலங்கை தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதியளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.
பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்திய தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய விசேட குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் சிறகமைப்பு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.
[தொகு] பொருளாதாரம்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் பொருளாதாரம்
புராதன காலந்தொட்டே நவரத்தினங்கள், யானைத் தந்தம், முத்துகள் போன்ற பொருட்களுக்கு புகழ்பெற்ற இலங்கை, குடியேற்ற காலத்தில் கறுவா, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வர்த்தக பயிர்களுக்கு பெயர்பெற்று விளங்கியது. இலங்கைக்கு 1948யில் சுதந்திரம் கிடைத்த பின்னர், முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றிய பொதிலும் அது ஆசியாவிலே மிகமுன்னேற்றகரமான பற்பல சமுகநல நடைவடிக்கையும் மேற்கொண்டது. ஆனால் 1956 ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முழுக்க முழுக்க சமவுடமை பொருளாதாரத்தையே கைக்கொள்ளத்தொடங்கியது. 1977மாம் ஆண்டுக்குப் பின்னர், தனியார்மயப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், சந்தைப் பொருளாதாரக் கொள்கையையும், ஏற்றுமதிசார்ந்த வர்த்தகத்தையும் நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அதி இயங்குநிலையிலுள்ள துறைகளாவன, உணவுப்பொருள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, உணவும், குடிவகைகளும், தொலைத் தொடர்பு, காப்புறுதி மற்றும் வங்கித் துறைகளாகும். 1996 அளவில், பெருந்தோட்டப் பயிர்கள் எற்றுமதியில் 20% ஐ மட்டுமே கொண்டிருந்தன (1970 இல் 93%), அதே நேரம் ஆடைகள் ஏற்றுமதியின் 63% ஆக இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 1990களில் சராசரியாக 5.5% ஆண்டு வளர்ச்சியைப் பெற்றது. வறட்சியும், சீர்கெட்டுவந்த பாதுகாப்பு நிலையும், 1996இல் வளர்ச்சியை 3.8% க்குத் தாழ்த்தும் வரை இது நீடித்தது. 1997-2000 காலப்பகுதியில், சராசரி 5.3% வளர்ச்சியோடு கூடிய பொருளாதார மீட்சி காணப்பட்டதெனினும், மின்சாரப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பிரச்சினைகள், உலகப் பொருளாதார மந்த நிலை, மற்றும் தொடர்ந்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள் என்பவற்றால், 2001ல் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ஒரு பொருளாதார ஒடுக்கத்தைக் காண நேர்ந்தது. எனினும் 2001 ல், கையெழுத்து இடப்பட்ட, இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பொருளாதாரம் தேறி வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கொழும்பு பங்குச் சந்தை 2003ல் ஆசியாவிலேயே அதி கூடிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது, தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளிடையே அதிக தனி நபர் வருமானத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்.
[தொகு] இலங்கை மக்கட்சமூகம்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் மக்கள் சமூகம்
இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாச்சாரங்களையும் பேனி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பொதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல அரசியல், சமூக பிரச்சனைகள் தோன்றியுள்ளன.
[தொகு] மக்கள் தொகை
முதன்மைக் கட்டுரை: மக்கள் தொகை
இலங்கையின் சனத்தொகை 19 மில்லியன் ஆகும். இலங்கை ஒரு வளர்முக வரும் நாடாகயிருந்த பொதும் அது வளர்ந்த நாடாகளை விஞ்சும் அளவிற்கு அதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவாக உள்ளது. மேலும் இது மிகவுயர்ந்த வாழ்க்கை சுட்டெண்ணை கொண்டுள்ளது.
இலங்கையின் ஆண்/பெண் பால் விகிதாசாரம் 0.98 என உள்ளது, இது தென்னாசியாவில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடும் பொது எதிர்மாறான தன்மையை காட்டுகின்றது.
[தொகு] தேசிய இனங்கள்
முதன்மைக் கட்டுரை: தேசிய இனங்கள்
இலங்கையின் பெரும்பான்மை இனம் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 74%மாக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய இனமாக தமிழர் உள்ளார்கள். நாட்டின் சனத்தொகையில் 18%மான இவர்கள், இலங்கை தமிழர் மற்றும் இந்திய தமிழர் என இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கை தமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், வதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அராபியர், மலாயர்களின் வழிதோன்றல்கள் 7%), பறங்கியர் (ஐரோபிய வழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.
[தொகு] தேசிய சமயங்கள்
முதன்மைக் கட்டுரை: தேசிய சமயங்கள்
இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (69%), இந்து சமயம் (15%) ஆகும். இவைதவிர கிறிஸ்தவம் (கதோலிகம் 6%, புரோட்ஸன்ட் 1%), இஸ்லாம் (7%) ஆகவும் உள்ளது.
சிங்களவர் பெரும்பாலாக தேரவாத பௌத்ததை பின்பற்றுவதுடன், தமிழர் பெரும்பாலாக இந்து சமயிகளாக உள்ளனர்.
[தொகு] தேசிய மொழிகள்
முதன்மைக் கட்டுரை: தேசிய மொழிகள்
இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும், சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும், ஆங்கிலம் வணிகத்துறையிலும் பெரும்பாண்மையாக பயன்பாட்டிலுள்ளது. 1987மாம் ஆண்டில் கைசாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முலம் தமிழும், சிங்களமும் அரசுகரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் அரசியல்யாப்பில் அங்கீகாரிக்க பட்டுள்ளது. ஆங்கிலம் பரவலாக இலங்கையில் உபயோகத்திலுள்ள போதிலும், பறங்கியர், இலங்கை மட்டுமே இதை தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்.
[தொகு] சமூக கட்டமைப்பு
முதன்மைக் கட்டுரை: சமூக கட்டமைப்பு
குடும்ப அமைப்பு: இலங்கையிலுள்ள அனைத்து இனங்களும் மிக முக்கியமாக கருதும் சமுகவலகு குடும்பமே ஆகும். இதன் கூறுகளாக கணவன், மனைவி, பிள்ளைகள் உள்ளனர். நாட்டின் அனேக குடும்பங்கள் கூட்டு குடும்பங்களாக இருந்த பொழுதும் தற்பொது உள்ள யுத்த, பொருளாதார காரணங்களால் அனுக்குடும்பங்கள் பிரபலமாகிவருகின்றன. கூட்டு குடும்பங்களில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக உள்ளதுடன், குடும்ப பிரசினைகளை சுமுகமாக தீர்த்தும் வைக்கின்றனர்.
இலங்கை உறவுமுறைகள் தென்னாசிய உறவுமுறைகளை ஒத்ததாகவே உள்ளன. திருமணங்கள் அனேகமாக நிச்சையிக்கப்பட்டவையாக உள்ளபொதும், காதல் திருமணங்களும் ஒத்துக்கொள்ளப்பட்டவையாகவே உளளன. நிச்சைய திருமணங்கள் முதல் மைத்துனர்களுக்கிடையே அனேகமாக முடிவுசெய்யப்படுகின்றன.
மிக பெரும்பான்மையான திருமணங்கள் ஏகதாரமணங்களாகவே அமைகின்றன. பல்தாரமணங்கள் சட்டவிரோதமனவையாகவும், சமுகத்தால் நிராகரிக்கபட்டவையாகவும் உள்ளன. அனால் செல்வந்த முஸ்லிம்கள், குடும்பங்களை பராமரிக்க முடியுமானால் பல மனைவிகளை மணந்து கொள்ளலாம். மேலும் மலைநாட்டு சிங்களவர்களிடையே ஒரு பெண் பல கணவர்களை மணப்பது வழக்காக உள்ளது, இதை அங்கிலேயர் தடைசெய்த பொதும் தற்பொழும் இது சகசமாகவே உள்ளது. இவ்வழக்கு கீழ்நாட்டு சிங்களவர்களிடையேயும் ஒரு காலத்தில் நிலவியபொதும் போர்த்துகீசர் இதை அகற்றினார்கள், தமிழரிடையே இவ்வழக்கு போர்த்துகீசர் வருகைக்குமுன் நிலவியதா என்பதுக்குரிய சான்றுகள் கிடைத்தில.
சாதி அமைப்பு: இலங்கை சமூக கட்டமைப்பின் அடித்தளமாக பிறப்பை அடிப்படையாகக்கொண்ட சாதி அதிகாரப்படிநிலையே காணப்படுகின்றது. இந்த சாதிக்கட்டமைப்பு சமயம், தொழில், பொருளாதாரம் போன்ற விடயங்களில் ஒருவரின் சமுக நிலையினை நிர்னயிக்கின்றது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்லாயின. தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும், நாட்டின் அரசியலிலும், திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி இன்னமும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
றோடி எனப்படும் சாதியினரே இலங்கையின் மிக கீழ் சாதியினர் ஆவர். சிங்கள அரசவம்சத்தில் றோடியர்கள் தோன்றிய பொதும், இவர்களின் முன்னோர்கள் நரமாமிசம் உட்கொண்டமையால் இவர்கள் சமுகத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். இவர்களை தீண்டுவது பெரும் குற்றமாக கருதப்பட்டது. இவர்கள் குப்பாயம் எனும் ஒதுக்குப்புர பகுதிகளில் வசிக்க வேண்டியிருந்ததுடன், மேலும் றோடிய ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேல் உடையனிய தடைசெய்யப்பட்டிருந்தனர்.
[தொகு] கலாச்சாரம்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் கலாச்சாரம்
இலங்கையின் கலாச்சாரம் உலகின் முக்கிய கலாச்சாரங்களில் ஒன்று. இது நால்விதமான இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி ஒரு கலவையாக வெளிப்பட்டு நிற்கின்றது. இக்கலாச்சாரம் உயரிய, பலக்கிய, பன்முக இசை, நடனம், இலக்கியம் என பல கூறுகளை கொண்டது. இலங்கையின் கலாச்சாரம் பல தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளை கொண்டது.
கர்நாடக இசை, கண்டிய இசை ஆகிய இரு முக்கிய நெறி இசை மரபுகள் உள்ளன. கர்நாடக இசை தமிழர் இடமும், கண்டிய இசை சிங்களவர் இடமும் தோற்றம் கொண்டன. இவை தவிர நாட்டார் இசை, இஸ்லாமிய இசை, பறங்கிய இசை என பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. நடனக்கலையில் பரத நாட்டியம், கண்டிய நாட்டியம் ஆகிய இரு நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம் மூலம் கதை பரிமாறப்படுகின்றது. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.
தமிழ், பாலி, சிங்களம், ஆங்கிலம் போன்ற பல முக்கிய மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இலங்கையின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன.
கொண்டாட்டங்கள் இலங்கை கலாச்சாரத்தின், வாழ்வியலின் இணைபிரியா அம்சங்கள் ஆகும். விசாக பௌர்ணமி, பொசன் பௌர்ணமி, தமிழ் சிங்கள புத்தாண்டு, பொங்கல், மகா சிவராத்திரி, தீபாவளி என கொண்டாட்டங்கள் பல உண்டு. சுதந்திர தினம், தமிழ் சிங்கள புத்தாண்டு போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.
சிங்களவர் தமிழர் இன வேறுபாடின்றி வேட்டி, சேலை போன்ற ஆடைகளையே தமது தேசிய உடைகளாக கொண்டுள்ளனர், இவையே நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும் கோதுமையுமே இலங்கை உணவு வகைகளை தயாரிப்பதில் முக்கியப்பங்கு கொள்கின்றன. சோறு, இடியப்பம், பாண், பிட்டு, அப்பம் ஆகியவை இலங்கையர் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.
இலங்கையரின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக திரைப்படங்கள் விளங்குகின்றது. சிங்களம், தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும், இந்தி, தமிழ் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
உலகமயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இலங்கை கலாச்சாரத்தை குறிப்பிடத்தக்க அளவு மேல் நாட்டு கலாச்சாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன மேலைத்திய இசை, இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு/உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.
பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இலங்கை கலாச்சாரத்தின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய பண்புகள் இன்னும் நீர்த்துப்போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.
[தொகு] பாதுகாப்பு கட்டமைப்பு
[தொகு] குற்றவியல் நீதித்துறை
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் நீதித்துறை
இலங்கையின் குற்றவியல் நீதித்துறை உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மாகாண மேல் நீதிமன்றங்கள் என்பனவற்றோடு, மேலும் பல கீழ்நிலை நீதிமன்றங்களை உள்ளடக்கியது. பல கலாசாரங்கள் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்பாகவே இலங்கையின் சட்ட முறைமை அமைந்துள்ளது. குற்றவியற் சட்டங்கள் ஆங்கிலேய முறையை பின்பற்றி அமைந்துள்ளதுடன், குடியியற் சட்டங்கள் உரோம-ஒல்லாந்து சட்டங்களாக உள்ளன. மேலும் இனரீதியான திருமண, மரபுரிமை சம்பந்தமான சட்டங்களும் உள்ளன.
[தொகு] இலங்கை காவற்துறை
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் காவற்துறை
இலங்கையின் தேசிய காவற்துறையே நாட்டின் சட்டவொழுங்கை பாதுகாக்கின்ற பிரதான அரச அமைப்பாகும். இதன் கடமைகளாக நாட்டின் உட்புர பாதுகாப்பு, சட்டவொழுங்கு என்பனவேயிருந்த பொதினும்கூட, இது இலங்கையின் பாதுகாப்பு படைகளின் உள்ளினைந்த அங்கமாக காணப்படுகின்றது. மேலும் தேசிய காவற்துறையின் விசேடமாக பயிற்றப்பட்ட அதிரடிப்படையினர், முப்படைகளுடன் கூட்டு நடவடிக்கைகளிலும் அனேகமாக ஈடுபடுத்தப்படுகினறனர்.
இலங்கையின் காவற்துறை வரலாறு மிகவும் பலமை வாய்ந்ததாக காணப்பட்ட பொதினும்கூட, நவீன அம்சங்கள் பொருந்திய காவற்துறையானது ஒல்லாந்தருடைய ஆட்சி காலத்திலேயே தாபிக்கப்பட்டது. அரம்பத்தில் வெவ்வேறு கூறுகளாகவிருந்த காவற்துறை 1858யில் ஒன்றினைக்கப்பட்டது. பின்னர் 1866 இலங்கை காவற் திணைக்களம் தாபிக்கப்பட்டது. இன்று 40,000 காவற்துறையினர் இதில் சேவைபுரிகின்றனர்.
1858யில் இருந்து பெரும் மாற்றம் எதுமில்லாதிருந்த காவற்துறை 2001 ஆண்டு நிறைவேற்றப்பட்ட 17வது அரசியலமைப்பு திருத்தசட்டத்தின் மூலம் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை தேசிய காவற்துறை இயங்குகின்றபோதிலும், அதன் நாளாந்த பணிகளை நடாத்தி செல்கின்றவர் பொலிஸ்மாஅதிபர் ஆவார். இவர் காவற்துறை ஆணைக்குழுவால் நியமிக்கப்படாத போதும் அவரின் அனைத்து அதிகாரங்களும், தேசிய காவற்துறை ஆணைக்குழுவிலிருந்தே பெறப்படுகின்றன.
[தொகு] பாதுகாப்பு படைகள்
முதன்மைக் கட்டுரை: இலங்கையின் பாதுகாப்பு படைகள்
இலங்கையின் முப்படைகளாவன இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை ஆகும். இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றன. இலங்கை அரசியல்யாப்பின் கீழ் சனாதிபதியே முப்படை தளபதியாக கொள்ளப்படுகிறார். சுதந்திரமடைந்த போது இலங்கையின் பாதுகாப்பு படைகளில் 70% வீதமானோர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருதபோதும் தற்போது அது 2% குறைந்துள்ளது.
1970தாம் ஆண்டு வரை சம்பிரதாயபூர்வமாக இருந்த படைகள், 1971மாம் ஆண்டு இடம்பெற்ற மார்சிச புரட்சியை தொடர்ந்து வலுப்பெறத்தொடங்கின. பின்னர் எற்பட்ட உள்நாட்டு போர், இனப்பிரச்சனை காரணமாக தற்போது இவை உலகில் அதிக போர் பயிர்ச்சி பெற்ற படைகளில் ஒன்றாக திகழ்கின்றன.
இலங்கை படைபலம் சம்பந்தமான சில புள்ளிவிபரங்கள்:
- இலங்கை இராணுவம் 90,000
- இலங்கை கடற்படை 20,000
- இலங்கை விமானப்படை 10,000
[தொகு] இதர தகவல்கள்
[தொகு] இவற்றையும் பார்க்க
- இலங்கையில் தகவல் தொடர்பு
- இலங்கையில் போக்குவரத்து
- இலங்கையில் வீதியமைப்பு
- இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து
- இலங்கையின் அரசியல் கட்சிகள்
- இலங்கையின் பாதுகாப்புப் படை
- இலங்கையின் பறவைகள்
- இலங்கையின் ஆட்சியாளர்
- புகழ் பெற்ற இலங்கையர்கள்
- இலங்கையின் தேசிய சின்னங்கள்
- கண்டி நடனம்
[தொகு] புகழ்பூத்த இலங்கையர்
- படப்படிப்பாளர் லயனல் வெண்ட்.
- கட்டடக்கலை நிபுனர் ஜேப்ரி பாவா.
- ஓவியர் ஜோர்ஜ் கைட்ஸ்.
- விளையாட்டு முத்தையா முரளிதரன்.
- இசைக்கலைஞர் டேஸ்மோன்ட் டீ சில்வா, ஏ.இ.மனோகரன்.
- கதாசிரியர் ஆத்தர் சி. கிளாக், மைக்கல் ஒதாஞ்சே.
- philanthropist கிரிஸ்தோபர் ஒதாஞ்சே.
- ஒலிபரப்பாளர் வெனோன் கொரேயா, பி.எச்.அப்துல் ஹமீது.
[தொகு] விடுமுறை நாட்கள்
இலங்கையில் பல விடுமுறை நாட்கள் கொண்டாட படுகின்றன. சிலர் உலகிலேயே அதிக விடுமுறை நாட்களை கொண்டது இலங்கையே என கருதுகிறார்கள். விடுமுறை நாட்களாவன:
- சனவரி - தைப்பொங்கல் தினம் *†#
- சனவரி - Id-Ul-Alha (ஹஜ் பெருநாள் தினம்) *†
- சனவரி - துருத்து பௌர்ணமி தினம் *†#
- பெப்பிரவரி - சுதந்திர தினம் *†#
- பெப்பிரவரி - நவம் பௌர்ணமி தினம் *†#
- மார்ச் - மகா சிவராத்திரி தினம் *†
- மார்ச் - மெதின் பௌர்ணமி தினம் *†#
- மார்ச் - பெரிய வெள்ளி *†
- ஏப்பிரல் - தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முந்தய தினம் *†#
- ஏப்பிரல் - தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் *†#
- ஏப்பிரல் - Milad-Un-Nabi (முகம்மது நபியவர்களின் பிறந்தநாள்) *†#
- ஏப்பிரல் - பக் பௌர்ணமி தினம் *†#
- மே - தொழிலாளர் தினம் *†#
- மே - வைகாசி விசாக பௌர்ணமி தினம் *†#
- மே - வைகாசி விசாக பௌர்ணமிக்கு அடுத்த நாள் *†#
- ஜூன் - பொசன் பௌர்ணமி தினம் *†#
- ஜூலை - எசல பௌர்ணமி தினம் *†#
- ஆகஸ்து - நிகினி பௌர்ணமி தினம் *†#
- செட்தெம்பர் - பினார பௌர்ணமி தினம் *†#
- ஒக்டோபர் (அக்டோபர்) - வப் பௌர்ணமி தினம் *†#
- நவம்பர் - தீபாவளி தினம் *†
- நவம்பர் - Id-Ul-Fitr (இரமசான் முடிவைக் குறிக்கும் தினம் - ஈகைப் பெருநாள் தினம் ) *†
- நவம்பர் - இல் பௌர்ணமி தினம் *†#
- டிசம்பர் - உன்துவப் பௌர்ணமி தினம் *†#
- டிசம்பர் - நத்தார் தினம் *†#
- * பொது விடுமுறை † வங்கி விடுமுறை # வர்த்தக விடுமுறை
[தொகு] சுவையான தகவல்கள்
- உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.
- ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
- முதலாவதாக ஆசியாவில் வானோலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
- ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.
- உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
- உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
- உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் இலங்கையிலேயே அமைக்கப்பட்டது [1].
- கிரிகட் உலகக் கிண்ணத்தை 1996 ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] அரசாங்கம்
- இலங்கை உத்தியோகபூர்வ அரசாங்க தளம்
- இலங்கை உத்தியோகபூர்வ அரசாங்க நுழைவாயில்
- இலங்கை சனாதிபதியின் உத்தியோகபூர்வ தளம்
- இலங்கை பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ தளம்
- இலங்கை உத்தியோகபூர்வ பாராளுமன்ற தளம்
[தொகு] செய்தி ஊடகங்கள்
- பரபரப்பு
- இலங்கை ரூபவாஹினி
- இலங்கை வானொலி
- சக்தி வானொலி
- சிரச வானொலி
- Daily News
- Daily Mirror
- Sunday Observer
- திவையின
- லக்பிம
- வீரகேசரி
- தினக்குரல்
- தமிழ்நெட் செய்திகள்
- பிபிஸி தமிழோசை
- உதயன்
- ஆயுதம்
[தொகு] மேலோட்டம்
- பிபிசி செய்திகள் - நாட்டுப்பண்புகள்: இலங்கை
- காங்கிரஸ் நூலகம் - நாட்டறிக்கை: இலங்கை ஜூலை 1987, இருந்தபடி.
- சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை 2005
- சி.ஐ.எ - உலக புள்ளிவிபரப்புத்தகம் -- இலங்கை
[தொகு] விபரகொத்துகள்
[தொகு] சுற்றுலாத்துறை
[தொகு] இதர இணைப்புகள்
- இலங்கை அரசியல்
- ஸ்ரீ தலதா மாளிகை தளம்
- இலங்கை செய்திகள் Updated 24/7
- இலங்கை வணிக செய்திகள் Updated 24/7
- இலங்கை செய்தி மேலோட்டங்கள்
- இலங்கையின் ஒலிபரப்புத்துறை வரலாறு
- ஐக்கிய இலங்கை - ஐக்கியம், சமாதனம், சனநாயகம் என்பவற்றை ஊக்குவிப்போம்
- இலங்கை நுழைவாயில்
இலங்கையின் முக்கிய நகரங்கள் | |
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகல் | இரத்தினபுரி | கேகாலை |
தெற்காசிய நாடுகள் | ||
வங்காளதேசம் • பூட்டான் • இந்தியா • மாலைதீவுகள் • நேபாளம் • பாக்கிஸ்தான் • இலங்கை |