ஸ்டோன் ஹெஞ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்டோன்ஹெஞ் இங்கிலாந்தில் உள்ள வில்ட்ஷயர் கவுண்டியில்,அமெஸ்பரிக்கு அருகே, சலிஸ்பரியிலிருந்து 13 கிமீ வடமேற்குத் திசையில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும். இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இவ்வமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள். இத் தொல்பொருட் சின்னத்தின், மிகப் பழைய பகுதியாகக் கருதப்படும், பழைய வட்டவடிவ மண் மேடுகளும், குழிகளும் கி.மு 3100 ஐச் சேர்ந்தவையெனக் கூறப்படுகின்றது.
இது அமைந்துள்ள இடமும், சுற்றாடலும், 1986ல் யுனெஸ்கோ வினால், உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது.