அமேசான் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்றாகும். மற்றொன்று நைல் நதியாகும். அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு மிஸ்ஸிஸிபி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகமாகும். இதன் நீளம் 6762 கி.மீ.களாகும்.
இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
[தொகு] அமேசான் மழைக்காடுகள்
அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது.
மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகையானது இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக இப்பகுதியில் ஓடி பின் கடலில் கலக்கின்றன.
இம்மழைக்காடு உயிரியல் வளம் மிக்கது ஆகும். இது 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள் பாலூட்டிகள் ஆகியவற்றிகும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவியினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன.